'இண்டிகோ' விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
'இண்டிகோ' விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
ADDED : ஆக 26, 2026 11:02 PM
பெங்களூரு: லக்னோவில் இருந்து பெங்களூரு வந்த, 'இண்டிகோ' விமானத்தின் கழிவறையில், வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டது.
லக்னோவில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை, இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது. பயணத்தின் போது, கழிவறையில், இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்ட கடிதத்தை, விமான பணியாளர்கள் கண்டெடுத்தனர்.
இவ்விஷயத்தை உடனடியாக விமானிக்கு தெரிவித்தனர். அவரும், ஏ.டி.சி., எனும் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர்.
காலை 9:40 மணிக்கு தரையிறங்கிய விமானம், பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பயணியர் பத்திரமாக இறக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின், விமானத்தின் உள்ளே அனைத்து பகுதிகளையும் மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நீண்ட நேர ஆய்வுக்கு பின், அது புரளி என்பதை உறுதி செய்தனர்.
விமானத்தின் கழிவறையில் இந்த கடிதம் கண்டெடுக்கப்பட்டதால், அனைத்து பயணியரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
