தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 5 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

 5 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

 5 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு


ADDED : ஜன 07, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று ஒரே நேரத்தில் ஐந்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு உள்ளது. கடந்தாண்டு பள்ளிகள், கல்லுாரிகள், நீதிமன்றங்களுக்கு, 'இ - - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, தமிழகத்தின் சென்னையை சேர்ந்த பெண்ணையும் கைது செய்திருந்தனர்.

மீண்டும்... இந்நிலையில், 2026ம் ஆண்டின் துவக்கத்திலேயே, ஒரே நாளில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளை, மைசூரு, பாகல்கோட், கதக், ஹாசன் மாவட்ட நீதிமன்றங்களின் இ - மெயிலுக்கு நேற்று காலை 10:30 மணியளவில் கடிதம் வந்திருந்தது.

மைசூரு மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்த மிரட்டல் கடிதத்தில், 'உங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. மதிய உணவு நேரத்தின் போது வெடிக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது.

உடனடியாக, மைசூரு முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உஷாராணி, லட்சுமிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வெடிகுண்டு செயலிழப்பு குழுவினருடன் போலீசார் வந்தனர்.

கிருஷ்ணராஜா போல்வர்டு சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்திலும்; குவெம்பு நகரின் மலலவாடியில் உள்ள பிரதான நீதிமன்ற வளாகத்திலும் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் சோதனை நடத்தினர். நீதிமன்ற அறைகளில் இருந்த நீதிபதிகள், வக்கீல்கள், பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருந்த அறைகள், நுாலகம், ஊழியர்கள் அறைகள், கேன்டீன்கள், வக்கீல்கள் சங்க அலுவலகம் என ஒரு இடத்தை கூட விடாமல், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

வதந்தி தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடந்த சோதனை முடிவில், குண்டு மிரட்டல் போலி என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்த சோதனையால், நேற்று முழுதும் நீதிமன்றம் செயல்படவில்லை. நேற்று நடக்கவிருந்த விசாரணைகள் அனைத்தும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டன.

இதுபோன்று, கதக் மாவட்டத்தில் நடந்த சோதனைக்கு பின், எஸ்.பி., ரோஹன் ஜெகதீஷ் கூறுகையில், ''எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன், 10 நிமிடத்தில் வந்து விட்டோம். நீதிமன்ற வளாகத்தில் ஒரு இடத்தை கூட விட்டு விடாமல் முழுதும் சோதனை நடத்தப்பட்டது,'' என்றார்.

இதுபோன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளை, ஹாசன், பாகல்கோட் ஆகிய நீதிமன்றங்களிலும் கடும் சோதனை நடத்தப்பட்டன. மிரட்டல் அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. இ - மெயிலில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, அந்தந்த மாவட்ட போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று ஒரே நாளில் ஐந்து நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us