கத்திக்குத்தில் காயமடைந்த சிறுவன் போலீஸ் கமிஷனரால் உயிர் பிழைத்தார்
கத்திக்குத்தில் காயமடைந்த சிறுவன் போலீஸ் கமிஷனரால் உயிர் பிழைத்தார்
ADDED : ஜூலை 22, 2026 11:21 PM

தார்வாட்: தார்வாடில் தாயால், கத்தி குத்துக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுவன், முழுமையாக குணமடைந்தார். இதற்கு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் முக்கிய காரணம்.
தார்வாட் நகரின், பாராகோட்ரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த கிரண், 45, மயக்க மருந்து நிபுணராக பணியாற்றினார். இவரது மனைவி பிரியங்கா, 40, கண் டாக்டராக பணியாற்றினார். இவர்களுக்கு நேஹித், 8, என்ற மகன் உள்ளார். தம்பதிக்குள் குடும்ப பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி, கணவர் கிரணை கத்தியால் குத்தி கொலை செய்த பிரியங்கா, மகனையும் குத்தினார். பிரியங்கா கைது செய்யப்பட்டார். மகன் நேஹித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, முழுமையாக குணமடைந்தார். சிறுவன் உயிர் பிழைக்க, ஹூப்பள்ளி - தார்வாட் நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் முக்கிய காரணம்.
சம்பவ இடத்துக்கு அவர் வந்த போது, ரத்த வெள்ளத்தில் சிறுவன் கிடந்தார். இதை கண்ட கமிஷனர், ஆம்புலன்சுக்காக காத்திராமல், தானே சிறுவனை வாகனத்தில் ஏற்றி, தானே வாகனத்தை ஓட்டி சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.
சரியான நேரத்தில், மருத்துவமனைக்கு வந்ததால் சிறுவன் உயிர் பிழைத்ததாக, டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி, அனைவரும் கமிஷனரின் மனிதநேயத்தை பாராட்டுகின்றனர்.
