ADDED : ஜூன் 14, 2026 11:37 PM

பேடரஹள்ளி: பெங்களூரு தெற்கு மாவட்டம், மாகடி தாலுகாவின் கெஜ்ஜரகுப்பே கிராமத்தில் வசித்தவர் பவானி, 22. படிப்பை முடித்த பின், பெற்றோருக்கு பொருளாதார ரீதியில் உதவியாக இருக்க வேண்டும் என, நினைத்து வேலை தேடி, பெங்களூருக்கு வந்தார்.
பேட்ரஹள்ளியின், திகளரபாளையாவின், துளசிநகரில் வசித்தார். இந்நிலையில் இவருக்கு சந்திரசேகர் என்ற சந்தன், 34, அறிமுகமானார். சந்திரசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி, 6 வயதில் குழந்தை உள்ளது. இது தெரிந்தும் அவரை பவானி காதலித்தார். ஓராண்டுக்கு முன், இருவரும் ரகசியமாக திருமணம் கொண்டனர்.
இதை அறியாத பெற்றோர், பவானிக்கு திருமணம் செய்ய தயாராகினர். இந்த விஷயத்தை அவர், நேற்று முன் தினம் இரவு, தன் வீட்டுக்கு வந்த சந்திரசேகரிடம் கூறினார். தன் தந்தை, இந்த காதலை ஏற்க மாட்டார் என, பவானி கூறினார்.
அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என, சந்திரசேகர் கூறினார். இதற்கு பவானி சம்மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சந்திரசேகர், பவானியுடன் திருமணம் செய்த போது எடுத்த போட்டோக்களை, சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
ரகசிய திருமணம் வெளிச்சத்துக்கு வந்ததால், சந்திரசேகரிடம் பவானி சண்டை போட்டார். கோபமடைந்த அவர், பவானியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். தானும் விஷம் குடித்து, தற்கொலைக்கு முயற்சித்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
