ADDED : ஜூன் 30, 2026 04:50 AM

மஹாலட்சுமி லே - அவுட்: தன்னை திருமணம் செய்ய மறுத்த காதலியை, கத்தியால் குத்தி கொன்ற காதலன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி, 23. இவரும், ராஜிவ் என்பவரும் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் போது அறிமுகமாகினர். பின் நாளடைவில், காதலர்களாக மாறினர்.
இவ்விஷயம், இருவரின் குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. ராஜிவ் குறித்து, அஞ்சலி குடும்பத்தினர் விசாரித்தபோது, அவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை அறிந்தனர்.
இது தொடர்பாக, தங்கள் மகளிடம் கூறி, இந்த உறவை முடித்து கொள்ளும்படி அறிவுரை வழங்கினர். ஆரம்பத்தில் மறுத்த அஞ்சலி, பெற்றோரின் தொடர் அறிவுரையை ஏற்று, ராஜிவிடம் பேசுவதை படிப்படியாக குறைத்தார்.
நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட, பைப் லைன் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு வரும்படி, அஞ்சலியை ராஜிவ் அழைத்தார். அவரும் அங்கு சென்றார். இருவரும் உணவு சாப்பிடும் போது, திருமணம் தொடர்பாக ராஜிவ் பேசினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த ராஜிவ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அஞ்சலியின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடினார்.
அங்கிருந்தவர்கள், அஞ்சலியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மஹாலட்சுமி லே அவுட் போலீசார், ராஜிவை கைது செய்தனர்.
