வியாபார மையமான விதான் சவுதா எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றச்சாட்டு
வியாபார மையமான விதான் சவுதா எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 26, 2026 11:50 PM

மாண்டியா: ''மக்களுக்கு சேவை செய்வதற்காக, கெங்கல் ஹனுமந்தையா கட்டிய விதான் சவுதா, இன்று வியாபார மையமாக மாறியுள்ளது. விதான் சவுதாவே, பணத்தின் பின்னால் ஓடுகிறது,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றம்சாட்டினார்.
மாண்டியா நகரில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், எம்.எல்.சி., பங்கேற்றார்.
அவர் பேசியதாவது:
விதான் சவுதாவே பணத்தின் பின்னால் ஓடுகிறது. அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவை செய்வது இல்லை. 80 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களாக உள்ளனர்.
கன்னடர்களின் மேம்பாட்டுக்காக செயல்பட வேண்டிய, விதான்சவுதாவின் அவலமான நிலைக்கு இன்றைய அரசியலே காரணம்.
இந்திய சுதந்திரத்துக்கு பின், அரசியலில் நுழையும் தன் விருப்பத்தை, டாடா - பிர்லா வெளிப்படுத்திய போது, நேரு எதிர்ப்பு தெரிவித்தார்.
'அணை, கட்டடம், கல்வி நிறுவனங்கள் கட்டுங்கள். அனைத்துக்கும் லைசென்ஸ் கொடுக்கிறோம். ஆனால் அரசியல் வேண்டாம். அரசியல் சக்தியும், பண பலமும் ஒரே இடத்தில் இருந்தால், ஜனநாயகம் விற்கப்பட்டு விடும்' என கூறியிருந்தார். நேரு கூறியது, இன்று நிஜமாகியுள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதற்காக, கெங்கல் ஹனுமந்தையா கட்டிய விதான்சவுதா, இன்று வியாபார மையமாக மாறியுள்ளது.
எம்.எல்.ஏ.,க்களை வாங்கவும், விற்கவும் சாட்சியாக நின்றிருப்பது, துரதுஷ்டவசமாகும்.
எழுத்தறிவும், மருத்துவமும் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகும்.
பெண்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக, அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை சலுகையை அளித்திருந்தால் போதுமானது. நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சை பெற சென்றால் அந்நபர் தன் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
