/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தொழிலதிபருக்கு பெங்களூரு சிறை கைதி மிரட்டல்
/
தொழிலதிபருக்கு பெங்களூரு சிறை கைதி மிரட்டல்
ADDED : ஏப் 16, 2025 08:45 AM

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து கொண்டே, கொலை குற்றவாளி ஒருவர், சித்ரதுர்காவில் உள்ள தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
பெங்களூரின், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கைதிகள் சட்டவிரோதமாக மொபைல் போன், போதை பொருள் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாக உள்ளது.
சிறையில் இருந்து கொண்டே தொழிலதிபர்கள், முக்கிய புள்ளிகளுக்கு போன் செய்து மிரட்டுவது, மாமூல் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றச்சாட்டு, பல ஆண்டுகளாக உள்ளது.
சிறையில் இருக்கும் சில முக்கிய கைதிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அளிப்பதாக கூறப்படுகிறது. அவ்வப்போது உயர் அதிகாரிகள் சிறையில் சோதனை நடத்துகின்றனர்.
கொலை குற்றவாளி
இதற்கிடையே சிறையில் உள்ள கொலை குற்றவாளி ஒருவர், தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
துமகூரின் முன்னாள் மேயர் கட்டா ரவி கொலை வழக்கில், சுஜய் பார்கவ், 34, கைதாகி பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் சிறையில் இருந்து கொண்டே, சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூரில் வசிக்கும் தொழிலதிபர் அர்ஜுன் சிங் என்பவரை வாய்ஸ் கால், மெசேஜ்கள் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி வந்து உள்ளார்,
ஹிரியூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கட்டடத்தில் வர்த்தக கடை நடத்தும் அர்ஜுன் சிங்கிடம் கடையை காலி செய்யும்படி மிரட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில நாட்களுக்கு முன், அர்ஜுன் சிங்கின் கார்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு, தன் இரண்டு கூட்டாளிகளை அனுப்பி மிரட்டி உள்ளார். இது மட்டுமின்றி, கடை இருக்கும் கட்டட உரிமையாளர் சூரிய நாராயணாவையும், அவரது மகனையும் மிரட்டி உள்ளார்.
சொத்து கேட்பு
சூரிய நாராயணாவின் சகோதரர் சந்திரசேகரின் மகன்தான் சுஜய் பார்கவ். பத்து ஆண்டுகளுக்கு முன்பே, சந்திரசேகர் தன் பங்கு சொத்துகளை பெற்று கொண்டார்.
இப்போது இவரது மகன் சுஜய் பார்கவ், தன் பெரியப்பா சூரிய நாராயணாவிடம், 'நானும் உங்களுக்கு மகன் போன்றவர் தான். எனக்கும் சொத்தில் பங்கு தாருங்கள்' என மிரட்டினார்.
இதற்கு பணியாத காரணத்தால், அவரது கட்டடத்தில் கடை நடத்தும் அர்ஜுன் சிங்கை மிரட்டி, கடையை காலி செய்ய வைக்க, சிறையில் இருந்தே சுஜய் பார்கவ் மிரட்டுகிறார்.
இது குறித்து, போலீசாரிடம் அர்ஜுன் சிங்கும், சூரிய நாராயணாவும் புகார் செய்து உள்ளனர்.

