/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.100 கோடி சொத்துகளை ஒதுக்கி ஜெயின் துறவியான தொழிலதிபர்
/
ரூ.100 கோடி சொத்துகளை ஒதுக்கி ஜெயின் துறவியான தொழிலதிபர்
ரூ.100 கோடி சொத்துகளை ஒதுக்கி ஜெயின் துறவியான தொழிலதிபர்
ரூ.100 கோடி சொத்துகளை ஒதுக்கி ஜெயின் துறவியான தொழிலதிபர்
ADDED : மே 22, 2025 11:19 PM

யாத்கிர்: அமெரிக்காவில் தொழில் நடத்தும், 100 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள தொழிலதிபர், அனைத்தையும் ஒதுக்கி, ஜெயின் துறவியாக தீட்சை பெற்றுள்ளார்.
யாத்கிர் தாலுகாவின் சைதாபுரா கிராமத்தில் வசிப்பவர் திலீப் குமார் தோகா, 55. இவர் கடந்த 12 ஆண்டுகளாக, அமெரிக்காவில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறார். இவருக்கு திருமணமாகி, மூன்று மகள்கள் உள்ளனர். மூவருக்கும் சிறப்பாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
இவருக்கு அமெரிக்காவிலும், பெங்களூரிலும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
சொத்துகள், சொகுசு பங்களா, அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தும் தொழில் என, அனைத்தும் இருந்தும் திலீப் குமார் தோகாவுக்கு, வாழ்க்கையில் பிடிப்பு இல்லை. எனவே மனைவி, மகள்கள், சொத்து, உற்றார், உறவினர் என, அனைத்தையும் துறந்து ஜெயின் துறவியாக தீட்சை பெற்றுள்ளார்.
தன்னை தனியாக விட்டு விட்டு, துறவறம் வேண்டாம் என, மனைவி கதறியும், திலீப் குமார் தோகா மனம் கரையவில்லை; தீட்சை பெற்று கொண்டார். வேறு வழியின்றி மனைவியும், உறவினர்களும் நேற்று அவரை சாரட் வண்டியில் ஊர்வலம் நடத்தி, கனத்த இதயத்துடன் வழி அனுப்பினர்.
திலீப் குமார் தோகாவுக்கு, 14 வயது சிறுவனாக இருந்த போதே, ஜெயின் தீட்சை பெற சென்றார். அப்போது பெற்றோர் பிடிவாதம் பிடித்ததால் வீடு திரும்பினார். தற்போது, 55 வயதில் தன் விருப்பத்தை நிறைவேற்றி கொண்டார்.
ஜெயின் துறவிகள் வாழ்க்கை கடினமானது. சொகுசு காரில் செல்ல கூடாது. செருப்பு அணியாமல் வெறுங்கால்களில் நடந்து, ஊர், ஊராக செல்ல வேண்டும். தலையை மொட்டையடித்து கொள்ள வேண்டும். வெண்மை உடை மட்டுமே அணிய வேண்டும். வீடு வீடாக சென்று பிச்சையெடுத்து சாப்பிட வேண்டும். இதுபோன்ற கடினமான பாதையில், அவர் தன் பயணத்தை துவக்கி உள்ளார்.
இதுபோன்று, யாத்கிர் நகரின், ஜெயின் லே - அவுட்டில் வசிக்கும் நிகிதா, 26, ஜெயின் தீட்சை பெற்று துறவியானார். இவர் கோடீஸ்வரர் குடும்பத்தின் செல்வ மகளாக இருந்தும், ஆடம்பர வாழ்க்கையை துாக்கியெறிந்து, துறவறம் பூண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.