/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் கலாசார மையம் அமைக்க அமைச்சரவை முடிவு
/
பெங்களூரில் கலாசார மையம் அமைக்க அமைச்சரவை முடிவு
ADDED : அக் 10, 2025 04:43 AM

பெங்களூரு: பெங்களூரில் 99.17 கோடி ரூபாயில் கலாசார மையம் அமைக்கும் திட்டத்துக்கு அமைச்சரை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
நடப்பு நிதி ஆண்டுக்கான உரங்களை சேமித்து வைக்க கர்நாடக மாநில விதை கழகம், கர்நாடக மாநில கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வாரியத்துக்கு தலா 200 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரதம மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்தை மாநிலத்தில் உள்ள 15 தாலுகாக்களில் கூடுதலாக செயல்படுத்த 90 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் நிதி 60 சதவீதம்; மாநில அரசின் நிதி 40 சதவீதம்.
மாநிலத்தில் நடக்கும் சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பிற்கான தேர்வின் அதிகபட்ச வயது வரம்பு 3 வயது குறைக்கப்பட்டது.
கர்நாடகாவில் உள்ள தரவு மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ஆண்டுக்கு 38.33 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. 5வது மாநில நிதி ஆணையத்தின் பதவி காலத்தை வரும் நவம்பர் வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது.
தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்தவர்களின் பிள்ளைகளின் கல்வி படிப்புக்காக புதிதாக 11 உண்டு உறைவிடப்பள்ளிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பொதுப்பணி துறையின் கீழ் நடக்கும் 39 பாலங்கள் புனரமைக்கும் பணிகளுக்காக 1,000 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. பீதர் மாவட்டம் அவுரட் பஞ்சாயத்தை, அவுரட் மாநகராட்சியாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
கடலோர மாவட்டங்களில் சேதமடைந்த நிலையில் உள்ள பாலங்களை மறுசீரமைக்க 1,000 கோடி ரூபாய் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.கர்நாடக தொழிலாளர் நல நிதி திருத்த மசோதா வரும் சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கனகபுராவில் 150 மாணவர்கள் படிக்கக்கூடிய அளவிலான மருத்துவ கல்லூரி, மாணவர் தங்கும் விடுதி, 300 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை ஆகியவற்றை 550 கோடி ரூபாயில் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டது.
தார்வாட், கலபுரகி, பெங்களூரு தெற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் பவன் கட்டுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் நிலம் ஒதுக்க அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. மங்களூரின் புளூபெர்ரி ஹில்ஸ் சாலையில் உள்ள 3,285 ஏக்கர் நிலத்தை மின்னணு தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் தொடர்பான 'டெக் பார்க்' அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
மைசூரில் உள்ள சி.பி.சி., பாலிடெக்னிக் நிறுவன கட்டடத்தை புதுப்பித்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு 120 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பெங்களூரு தட்டகுனியில் உள்ள தேவிகாரணி எஸ்டேட்டில் சுற்றுலா மற்றும் கலாசார மையத்தை அமைக்க 99.17 கோடி ரூபாயிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.