ADDED : செப் 04, 2026 03:45 AM
பெங்களூரு: 'மாணவர்கள், பெற்றோர், கல்வி வல்லுநர்கள், பொது மக்களிடம் இருந்து கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை பெற, தனி இணையதளம் துவங்க வேண்டும்' என அமைச்சரவை துணைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அமைச்சர்கள், அதிகாரிகள் மாணவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, கல்வியில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டு, சுகாதார அமைச்சர் யு.டி. காதர் தலைமையில் அமைக்கப்பட்ட, மாணவர் பிரச்னைகள் மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் மீதான அமைச்சரவை துணைக் குழுவின் முதல் கூட்டம், விதான் சவுதாவில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர்கள் மது பங்காரப்பா, பசவராஜ் ராயரெட்டி, பிரியங்க் கார்கே, சரணபிரகாஷ் பாட்டீல், முதல்வரின் பொருளாதார ஆலோசகர் ஆதிக், பள்ளி கல்வி துறை கூடுதல் தலைமை செயலர் ராஷ்மி, உயர்கல்வி துறை அரசு செயலர் துளசி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆறு முக்கிய பிரச்னைகள், கல்வி முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்வுகளின் நேர்மை, ஆள் சேர்ப்பு, கல்வி செலவு, கட்டணம், பயிற்சி மையங்களின் ஒழுங்குமுறை, பொது கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, தரம், பாட திட்டம், திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு இணைப்புகள், மாணவர்களின் மன நலம், நல்வாழ்வு, கல்விக்கான அணுகல், சமத்துவம் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டன.
கல்வித்துறையில் தேவையான மாற்றங்கள் கொண்டு வர, நிபுணர் கருத்துகளை சேகரிப்பது மிகவும் முக்கியம். முதலில், நிபுணர்கள் கூட்டம் கூட்டப்பட்டு, அவர்களின் ஆலோசனைகள் கோரப்பட வேண்டும்.
மாணவர்களின் பிரச்னைகள் குறித்து பொது மக்களிடம் இருந்து தகவல் சேகரிக்க வேண்டும். இதற்காக விரிவான பிரசாரம் செய்ய வேண்டும்.
வல்லுநர்கள் மாணவர்கள், பெற்றோர், கல்வி வல்லுநர்கள், பொது மக்களிடம் இருந்து கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை பெற, தனி இணையதளம் துவங்க வேண்டும். மாணவர்களின் பிரச்னைகளையும், விருப்பங்களையும் நேரடியாக புரிந்து கொண்டு, அவற்றின் அடிப்படையில் சீர்திருத்த நடவடிக்கைகள் வகுக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி., எனும் மத்திய பொது சேவை ஆணையம் பாணி முறையை, கே.பி.எஸ்.சி.,எனும் கர்நாடக பொது சேவை ஆணையத்தின் ஆட்சேர்ப்பு செயல்முறை கொண்டு வர வேண்டும்.
கே.பி.எஸ்.சி., ஆட்சேர்ப்பு செயல்முறையில் காணப்படும் முறைகேடுகள், அது தொடர்பான சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க தேவையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
இதுபோல கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
