UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 07:54 PM

விஜயபுரா: துவரம் பருப்பு விளைச்சலுக்கு நடுவே, கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது செய்யப்பட்டார். ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விஜயபுரா மாவட்ட போலீசார், போதைப்பொருள் கடத்தலையும், விற்பனையையும் கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். பணத்தாசையால் விவசாயிகளே, தங்கள் தோட்டத்தில், பயிர்களுக்கு நடுவே கஞ்சா பயிரிடுவதை கண்டுபிடித்து, பறிமுதல் செய்கின்றனர்.
பசவனபாகேவாடி தாலுகாவின் தின்டவாரா கிராமத்தில் விவசாயி சிவசங்கர் ஜீர், நிலத்தில் துவரம்பருப்பு விளைச்சலுக்கு நடுவே, கஞ்சா பயிரிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலையில் அங்கு சென்ற போலீசார், வறட்சி சூழ்நிலையிலும் செழிப்பாக வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார், 500க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை, பறிமுதல் செய்தனர். மார்க்கெட்டில் இதன் மதிப்பு 1 கோடியே ஒரு லட்சத்து 37,000 ரூபாயாகும். விவசாயி சிவசங்கரையும் கைது செய்தனர்.
அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், இதை பயிரிட்டதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
