/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாஜி' காதலியின் திருமண வாழ்வை சீர்குலைத்த வாலிபர் மீது வழக்கு
/
'மாஜி' காதலியின் திருமண வாழ்வை சீர்குலைத்த வாலிபர் மீது வழக்கு
'மாஜி' காதலியின் திருமண வாழ்வை சீர்குலைத்த வாலிபர் மீது வழக்கு
'மாஜி' காதலியின் திருமண வாழ்வை சீர்குலைத்த வாலிபர் மீது வழக்கு
ADDED : டிச 16, 2025 05:19 AM
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகாவின் பலிசுர்சி கிராமத்தில் வசிப்பவர் அம்பரிஷ், 26. இவர் சில ஆண்டுகளாக, 22 வயது இளம்பெண்ணை காதலித்தார். இருவரும் வேறு, வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். திருமணத்துக்கு தயாரான நிலையில், ஜாதியை காரணம் காட்டி, திருமணம் செய்ய அம்பரிஷ் மறுத்தார். இதை ஏற்று, இளம்பெண் விலகி சென்றுவிட்டார்.
அதன்பின் இளம்பெண், பழைய காதலை மறந்துவிட்டு, கடந்த மூன்று வாரங்களுக்கு முன், வேறு ஒரு இளைஞரை திருமணம் செய்து, புது வாழ்க்கையை துவக்கினார்.
இது, முன்னாள் காதலர் அம்பரிஷுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. காதலிக்கும் நாட்களில் இளம்பெண் தன்னுடன் எடுத்து கொண்ட போட்டோக்கள், வீடியோக்களை இளம்பெண்ணின் நண்பர் சுனில்குமாருக்கு அனுப்பினார்.
சுனில்குமாருக்கும், இளம்பெண்ணுக்கும் ஏதோ காரணத்தால் மனக்கசப்பு இருந்தது.
எனவே போட்டோக்கள், வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பும்படி அம்பரிஷ் கூறினார். சுனில்குமாரும் இளம்பெண்ணின் கணவருக்கு அனுப்பினார். தன் மனைவி வேறு ஒருவருடன் நெருக்கமாக உள்ள வீடியோக்கள், போட்டோக்களை பார்த்த கணவர், கோபமடைந்தார். உன் சகவாசமே தேவையில்லை என கூறி தாலியை பறித்து கொண்டு, பெண்ணை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.
கழுத்தில் தாலி ஏறிய ஒரு மாதம் ஆவதற்குள், பெண்ணின் திருமண வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது. இதனால் மனம் நொந்த இளம்பெண், நியாயம் கேட்டு அம்பரிஷின் வீட்டு முன், நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் அவர் தன் வீட்டை பூட்டிக்கொண்டு, குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
அம்பரிஷ் மீது, சித்லகட்டா போலீஸ் நிலையத்தில், இளம்பெண் புகார் செய்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.

