/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்; ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு
/
கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்; ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு
கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்; ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு
கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்; ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு
ADDED : ஏப் 03, 2025 07:24 AM

பேகூர் : அரசு பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரு, பேகூர் மெயின் ரோடு, விஸ்வபிரியா லே - அவுட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியின் கழிப்பறை தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு குழந்தைகளின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதுபோன்ற செயலில் மாணவர்களை ஈடுபடுத்திய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய கூறிய பள்ளி தலைமை ஆசிரியை சாக்கம்மா, உடற்கல்வி ஆசிரியை சுமித்ரா ஆகியோர் மன்னிப்பு கேட்டனர். இச்சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்ததாக விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், சேஷாத்ரிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகேஷ் என்பவர், கடந்த மாதம் 29ம் தேதி பேகூர் போலீஸ் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் பள்ளியின் தலைமை ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியை மீது புகார் அளித்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை துவங்கினர். இதில் பல தகவல்கள் வெளியாகின. வீடியோ ஜன., 16ம் தேதி, பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவரால் எடுக்கப்பட்டுள்ளது.
அவர் இந்த வீடியோவை மற்ற பெற்றோருக்கும் பகிர்ந்துள்ளார். ஆனால், இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு தான் பரவியது.
'இவ்விவகாரத்தில் தொடர்புடைய இரண்டு ஆசிரியைகளும் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும். பின், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, பெங்களூரு அத்திகுப்பே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள கழிப்பறையை மாணவ, மாணவியர் சுத்தம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்களை சுத்தம் செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது உள்ளிட்ட வேலைகளை செய்ய வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென, துவக்கக் கல்வி அமைச்சர் மது பங்காரப்பா எச்சரித்திருந்தார்.
இருப்பினும், இதுபோன்ற தொடர் சம்பவங்கள் பெங்களூரு நகரிலேயே நடந்து வருவது பெற்றோரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

