/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கியது குஸ்தி
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கியது குஸ்தி
ADDED : ஏப் 13, 2025 08:33 AM
பெங்களூரு : ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பா.ஜ., - ம.ஜ.த., மட்டுமின்றி, ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா முதல் முறையாக முதல்வரானபோது, காந்தராஜ் தலைமையில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் இடைக்கால அறிக்கை, கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,வும், வீரசைவ - லிங்காயத் சபை தலைவருமான ஷாமனுார் சிவசங்கரப்பா உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பா.ஜ., - ம.ஜ.த.,வும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதற்கு அடிபணிந்த அரசு, அறிக்கையை ஆய்வு செய்ய திட்டமிட்டது.
வாய்மொழி
சில மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என, ஆமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தின்போது, மேலிட தலைவர்களிடம் வாய்மொழியாக சித்தராமையா சொல்லி உள்ளார்.
அதன்படியே, நேற்று முன் தினம் அமைச்சரவை கூட்டத்தில், கன்னட கலாசார துணை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாயின.
இந்த அறிக்கைக்கு லிங்காயத் தலைவர்களான அமைச்சர்கள் ஈஸ்வர் கன்ட்ரே, எம்.பி.பாட்டீல் உட்பட சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் துணை முதல்வர் சிவகுமார், 'வரும் நாட்களில் குறிப்பாக ஒக்கலிகர், லிங்காயத் சமூகங்களிடம் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தும்' என்று எச்சரித்தார்.
அக்டோபர், நவம்பரில் மாநில தலைமை மாற்றப்படும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக, இந்த அறிக்கையை சமர்ப்பித்து, தன் பலத்தை நிரூபித்து, சிவகுமாருக்கு 'செக்' வைத்துள்ளதாக காங்கிரசின் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
மொத்தத்தில், இந்த அறிக்கை ஆளும் கட்சிக்குள் தலைவர்கள் இடையே குஸ்தியை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்ப்பு
இந்த அறிக்கை தொடர்பாக வீரசைவ, லிங்காயத் மகாசபை செயலர் ரேணுகா பிரசன்னா கூறியதாவது:
காந்தராஜ் அறிக்கையை எதிர்க்கிறோம். இது அறிவியலுக்கு புறம்பானது. நாங்கள் அரசின் வீரசைவ - லிங்காயத்து அமைச்சர்களை சந்தித்து, அறிக்கையால் ஏற்படும் ஆபத்துகளை விளக்குவோம். எங்கள் சமூகத்தின் நலன் பாதிக்கப்பட்டால், வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவோம்.
இதுதொடர்பாக, சாதக, பாதகங்களை பகுப்பாய்வு செய்ய, வரும் 15, 16ல் இச்சமூக தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளின் அவசர கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் நேற்று கூறுகையில், ''ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து, வரும் 17ம் தேதி முடிவு செய்யப்படும். மக்கள்தொகை அடிப்படையில், இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். எங்களிடம் ஜாதி வாரி கணக்கெடுப்பு டேட்டா உள்ளது. இதன்படி இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம். 75 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்போம் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார். தெலுங்கானாவில் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்தது கர்நாடகாவில் செயல்படுத்துவோம். அதன்பின் ஜார்க்கண்ட் என அமல்படுத்துவோம்.
''ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை செயல்படுத்த, எங்கள் கட்சியின் சாமனுார் சிவசங்கரப்பா எதிர்ப்புத் தெரிவிக்கிறார். காங்கிரசை யாரும் மிரட்ட முடியாது. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை செயல்படுத்துவதாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபோது, அவர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?'' என்றார்.