/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'களிமண் சிலைகளுடன் சதுர்த்தி கொண்டாடுங்கள்'
/
'களிமண் சிலைகளுடன் சதுர்த்தி கொண்டாடுங்கள்'
ADDED : ஆக 06, 2025 08:14 AM

பெங்களூரு : ''களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி மக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்,'' என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று, விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் பேசியதாவது:
பி.ஓ.பி., எனும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி, சிலைகளை உற்பத்தி செய்வோர் மீது வழக்குகள் பதிவாகும்.
நகரில் 40க்கும் மேற்பட்ட ஏரிகளில் விநாயகர் சிலை கரைப்பதற்கான ஏற்பா டுகள் செய்யப்படும். தேவையான இடங்களில் கிரேன்கள் நிறுவப்படும். சிலைகளை கரைப்பதற்கு உதவி செய்ய நீச்சல் தெரிந்தவர்கள், கூடுதலாக துப்புரவு ஊழியர்களும் நியமிக்கப்படுவர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.