சாம்பியன் ரீப் தபால் நிலையம் உரிகத்துடன் இணைப்பு
சாம்பியன் ரீப் தபால் நிலையம் உரிகத்துடன் இணைப்பு
ADDED : ஜூன் 15, 2026 10:27 PM

தங்கவயல்: தங்கவயலின் நுாற்றாண்டு பழமை வாய்ந்த சாம்பியன் ரீப் தபால் நிலையம் நேற்றுடன் மூடப்பட்டது. இந்த தபால் நிலைய சேவைகள் அனைத்தும் உரிகம் தபால் நிலையத்துடன் இணைக்கப்பட்டன.
தங்கவயலில் ரயில் நிலையங்கள், போலீஸ் நிலையங்கள், தபால் நிலையங்கள் ஆகியவை அருகருகே நுாற்றாண்டு காலமாக இயங்கி வந்தன. இதில், சாம்பியன், மாரிகுப்பம் போலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன.
இவை உரிகம், ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலையங்களுடன் இணைக்கப்பட்டன.
இந்த வரிசையில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த சாம்பியன் ரீப் தபால் நிலையம் -நேற்றுடன் மூடப்பட்டது. இதன் பின்கோடு, '563 117' தன் முகவரியை இழக்கிறது. இதன் கீழ் இருந்த பகுதிகள், உரிகம் தபால் நிலையத்துடன் இணைக்கப்படுன்றன.
சேமிப்பு, முதியோர், விதவை, மாற்று திறனாளிகளுக்கான பென்ஷன், பதிவு தபால்கள், கடித பரிமாற்ற தொடர்புகளுக்கு, இனி உரிகம் தபால் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
இங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் சிக்கபல்லாப்பூர் மாவட்டம், சித்லகட்டா நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து, பெமல் நகர், கோரமண்டல் தபால் நிலையங்களும் மூடப்படும் என தெரிகிறது.
