/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டீஸ்வரி வர்தந்தி விழா கோலாகலம்
/
சாமுண்டீஸ்வரி வர்தந்தி விழா கோலாகலம்
ADDED : ஜூலை 17, 2025 11:03 PM

மைசூரு:சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி வர்தந்தி எனும் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தங்க பல்லக்கில் பக்தர்கள் மத்தியில் அம்மன் கோவிலை வலம் வந்தார்.
மைசூரு சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி வர்தந்தி விழா, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், தேவிகெரேவில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அதன் பின் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
குங்கும அர்ச்சனை, சஹஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டது. மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி, அவரது மகன் யதுவீர், மனைவி திரிஷிகா குமாரி, சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
தங்க பல்லக்கு
காலை 8:00 மணிக்கு மேல் அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மஹா மங்களாரத்திக்கு பின், கோவிலில் இருந்து வெளியே வந்த உற்சவர், தங்க பல்லக்கில் எழுந்தருளினார்.
மன்னர் குடும்பத்தினர் பல்லக்கு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அரண்மனை போலீஸ் பேண்டு வாத்தியங்கள் முழங்க பல்லக்கு ஊர்வலம் சென்றது. அப்போது 'ஜெய் துர்கா', 'ஜெய் சாமுண்டீஸ்வரி' என்று பக்தர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர்.
அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள், அதிகாலை முதலே மலைக்கு வர துவங்கினர். இதற்காக லலித மஹால் அரண்மனை மைதானத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. படிக்கட்டுகள் வழியாகவும் பக்தர்கள் வருகை தந்தனர்.
மன்னர் குடும்பத்தின் யதுவீர் கூறுகையில், ''கன்னட ஆஷாடா மாதத்தின் ரேவதி நட்சத்திரத்தில், மும்முடி கிருஷ்ணராஜா உடையார், சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார். அன்றைய தினமே, சாமுண்டீஸ்வரியின் வர்தந்தியாக கொண்டாடப்படுகிறது.
''ஆஷாடா மாதத்தில் வர்தந்தி வருவது மிகவும் சிறப்பு. நாட்டில் நல்ல மழை, விவசாயம் செழிக்க சாமுண்டீஸ்வரி அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்,'' என்றார்.
நகரின் பல இடங்களில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை மாலை தேவிகெரேயில் அம்மனின் தெப்ப உத்சவம் நடக்கிறது. இதையடுத்து, வர்தந்தி விழா நிறைவு பெறுகிறது.
சேலைகள் வழங்கல்
சாமுண்டி மலை அடிவாரத்தில், துாய்மை பணியாளர்கள், திருநங்கையருக்கு, சேலை, மஞ்சள், குங்குமம், பச்சை நிற வளையல், பூ ஆகிய மங்கல பொருட்கள் அடங்கிய முறத்தை, மாநில மகளிர் கமிஷன் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி வழங்கினார்.

