ராமரும்,- அனுமனும்
ரா மருக்கு எப்படி அனுமனோ அதே போல தான் உணவுத்துறை மந்திரிக்கு நான் ஒரு பக்தர். சில சூழல்களில் ராமருக்கு எதிராக யுத்தம் நடத்த வேண்டிய காலமும் இருந்தது. இப்போதைக்கு எல்லாம் சரியாகி விட்டதாக ப.பேட்டை அசெம்பிளிக் காரர் தாம் இடம் விட்டு இடம் தாவியதை கூறியுள்ளார். இந்த அனுமன், எவ்வளவு காலம் தேவனஹள்ளி ராமருக்கு பக்தராக இருக்க போறாரோ.
இருந்தாலும் மார்பை பிளந்து காட்டின அனுமனுக்கு சமமான பக்தராக இவர் தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதை, குருநாதரும், ஜனங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே.
அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது; எதிரியும் கிடையாது என்பது பலருக்கும் தெரியும். அதனால் ராமருக்கு நிகராக பில்டப் கொடுப்பதை யார் ஏற்றுக்கொள்வாங்க.
கனவு திட்டம் பலிக்குமா?
பொ ன்னான நகரில் உருவாகப்போற தொழிற்பூங்கா மேடைக்கு மேடை வெறும் பேச்சாகவே இருக்குது. இதுக்காக சட்டப் பிதா பேர்ல இருக்கிற சுற்று சூழல் பூங்காவையும் 'ஸ்வாஹா' செய்றாங்க. தொழிற்பூங்காவுக்கான அடுத்த கட்ட ஆக்கபூர்வமான திட்டத்துக்கு அரசின் முடிவு தெரியல. பட்ஜெட்டில் அறிவித்து புள்ளி வைத்ததோட சரி. அதுக்கப்புறம் உள்கட்டமைப்புக்கான 'கோலம்' என்னாச்சோ. உள்நாடு, வெளிநாடு எத்தனை கம்பெனிகள் நுழைய போகுதோ. இவைகளுக்கு எப்போ தான் பெர்மிஷன் கிடைக்குமோ. இவங்களுக்கு இடங்களை எங்கே அளந்து கொடுக்க போறாங்களோ.
நடப்பு ஐந்தாண்டில் தொடங்குமா. அடுத்த ஐந்தாண்டுக்கு பிறகு தான் தீர்வாகுமா. இப்படி தான் மாங்கனி மாவட்டத்தில் பல்லாயிரம் பேர் வேலை செய்யப் போற ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு இடம் தேர்வு செய்தாங்க. தரிசு நிலம் பரிசாக ஒதுக்கினாங்க. தனியார் நிலங்களையும் வாங்க ரேட்டு பேசினாங்க. ஆனால் 15 வருஷமா திட்டம் துாங்கிக் கொண்டிருக்கிறது. இது தனது கனவு திட்டம்னு சொன்னவருக்கு இப்பவும் துாக்கத்தின் கனவாகவே இருக்குது. இந்த பட்டியலில் கோல்டு நகரின் தொழிற்பூங்காவும் வந்திட கூடாது.
யாருக்கு யாரை தெரியும்?
மு னிசி.,யில் மாதந்தோறும் நடக்க வேண்டிய கூட்டம், இரண்டு மாதங்களாக நடக்கவில்லை. இதுபற்றி முனிசி.,யின் பெரிய ஆபீசரை கேட்க வேண்டிய உறுப்பினர்கள் எதுக்காக மவுனமாக இருக்காங்களோ. புதுசா பதவிக்கு வந்திருக்கும் பெரிய ஆபீசரு, 35 உறுப்பினர்களையும் ஒரு முறையாவது அழைத்து பேசியதாக தெரியல. இப்படி இருக்க, அவர் எப்படி 35 வார்டுகளின் பிரச்னைகளை அறிந்திருக்க முடியும்.
பொன்னான நகரின் முதல் மார்க்கெட் ஆ.பேட்டையில் தான் உருவானது. சிதைந்து கிடக்குது. அதனை சீர்படுத்த பார்வை பட்டதாக தெரியல. இங்கு நிறைய ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அடங்காத மிரட்டல்களும் உள்ளதாக பேசுறாங்க. இவைகளை அடக்கினால் தான் உருப்படுமாம். இதற்கு காக்கிகள் முழு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக மக்கள் பிரதிநிதிகளும் நம்புறாங்க.
அக்கறை காட்டுங்களே!
கோ ல்டு சிட்டியில் ஏழு தபால் நிலையம் மூலம் முதியோர், விதவை, மாற்று திறனாளிகளுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த பென்ஷன் தொகையை அந்தந்த பகுதிகளில் உள்ள தபால்காரர்கள் பட்டுவாடா செய்து வந்தாங்க. தற்போது, தலைமை தபால் நிலையம் உள்ள ரா.பேட்டையில் மட்டுமே பட்டுவாடா செய்றாங்களாம். இதனால், பல மைல் தொலைவில் இருந்து வருபவங்க, தபால் நிலையத்தில் காத்திருக்காங்க. மன உளைச்சலுக்கு ஆளாகுறாங்க.
ஏற்கனவே, பென்ஷன் பணம் பட்டுவாடா செய்றவங்க, 50 ரூபாய் பிடித்தம் செய்து தான் வழங்குறாங்க. போதாக்குறையாக ஆட்டோவுக்கு 100 ரூபாய் செலவு செய்யணும். ஒரு நாள் முழுதும் காத்திருக்கணும். மக்கள் பிரதிநிதிகள் இதன் மீது அக்கறை காட்டக் கூடாதா.