தலைவரே உஷார்!
உ ள்ளாட்சிகளுக்கு தேர்தலை விரைந்து நடத்த அரசு மும்முரமாக இருக்குது. நகராட்சி வார்டுகளுக்கு ஜாதி இட ஒதுக்கீடும், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடும் கூட ஒரே நேரத்தில் அறிவிக்க தீர்மானித்து இருக்காங்களாம். இதனால், தங்கமண் நகராட்சியில் 35 வார்டுகளிலும் செல்வாக்கு இருக்கிறது என கூறுவோரின் அலப்பறை ஓவராக இருக்குது.
அசெம்பிளிக்குள் நுழைய முடியாமல் மூன்று முறை தோல்வி அடைந்த 'மாஜி'க்கு, அசெம்பிளி ஆசை வெறுத்து, உள்ளூரு வார்டு தான் கதியென இருக்காராம். எங்கு போட்டியிட்டாலும் ஜெயித்துக் காட்டுவேன்னு சொல்றாரு. ஆனாலும், வடக்கு டவுன் வார்டு தான் 'சேப்டி' என நாடி பிடித்து பாக்குறாரு. அந்த ஜனங்களோட மனநிலையை சோதிக்க, அவரோட ஆதரவாளர்களிடம் பொறுப்பு ஒப்படைத்து இருக்காரு. இவரது, காலை வாறும் வேலையை அவரின் சீடர்களே செய்து வர்ராங்களாம். அதனால், அவரு உஷாராக இருக்கணுமாம். இதனை எப்படி அவரிடம் சொல்வதென விசுவாசிங்க முணுமுணுக்குறாங்க.
எல்லாமே பூக்காரங்க நிதி?
வ ட்ட நிர்வாக ஆபீசான லிட்டில் சவுதா, அரசு ஆஸ்பிட்டல், வட்டார பஞ்., அலுவலகம் எல்லாமே பூக்காரங்க ஆட்சியின் நிதியால் தான் உருவானதாக சொல்றாங்க. கைக்காரங்க ஆட்சியில் பேர் சொல்றாப்ல என்னத்த காட்டுவாங்க. அதுக்காக தானே கோவில் ராஜகோபுரமும், ஒரு வரலாற்று ஆய்வரங்கமும் கட்டுறாங்களாம். இவைகளுக்கு நிதி எப்போ வருமோ. ஏற்கனவே வந்த தொகை திருப்பி போனதா செங்கோட்டை மாஜி பூக்காரர் சொன்னதெல்லாம் பொய்யா. காக்கி பயிற்சி நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டுனாங்களே; அதன் கட்டுமானப் பணி எப்போ துவங்கி, எப்போ முடிக்க போறாங்களோ.
'ஓசி' பயணம் நிலைக்காது!
ரெ ண்டு வருஷத்துக்கு முன்னாடி, கோவில்களுக்கு செல்ல போட்டாப்போட்டியில் இலவச பஸ்களை வார்டு தோறும் அனுப்பி வெச்சாங்க. ஆனால், அந்த இலவச பஸ் சேவையை நடப்பாண்டு மறந்துட்டாங்களோ. பக்தர்கள் மனதில், தேர்தல் நேர இலவச பஸ் சேவை காட்சிகளின் ரீல் ஓடிக்கொண்டிருக்குது. பக்தி பயணத்தில் அரசியல்வாதிகளின் 'ஓசி' பஸ் சேவை நிரந்தரமானதாக இருக்காது என்பதை இனியாவது புரிஞ்சிக்க வேணுமுன்னு பக்தைகள் தங்கள் நட்பு வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.
தண்ணீர்... தண்ணீர்...
எ ங்கோ உற்பத்தியாகி ஓடும் தண்ணீர் கிடைக்குமான்னு ஏங்குகிற ஜனங்களும், அதற்கான திட்டங்களும் வெறும் கண்ணாமூச்சி ஆட்டமாவே இருக்குது. ஆனால், கோல்டன் சுரங்கத்தில் சுரந்த நீர் நிரம்பி இருப்பதாக நிபுணர்கள் சொல்றாங்க. இந்த நீரை சுத்திகரிப்பு செய்தால் மாவட்டம் முழுதுக்கும் குடிநீர் வழங்கலாமென சொல்றாங்க.
என்னிக்கோ கிடைக்கிற பலாக்காயை விட இன்னிக்கு கிடைக்கிற காய் மேலென நினைக்காமல், பல ஆண்டா காவிரி வருமா, கிருஷ்ணா கிடைக்குமான்னு பகல் கனவு காணலாமா. நிரம்பி வழியும் பேத்தமங்களா ஏரி நீர் வீணாகி வெளியேறுவதை கண்டும் காணாமல் இருக்குறாங்க. கோல்டு சிட்டியும் தண்ணீர் இல்லாத பகுதியாக மாறிடுமோ.

