முதல்வர் மாற்றத்தால் பயனில்லை: சலவாதி நாராயணசாமி கருத்து
முதல்வர் மாற்றத்தால் பயனில்லை: சலவாதி நாராயணசாமி கருத்து
ADDED : மே 28, 2026 03:19 AM

மைசூரு: ' ' மாநிலத்தில் முதல்வர் மாறுவதால், எந்த மாற்றமும் ஏற்படாது. சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதில், எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, ' ' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசின் ஆட்சி திறன், தலித் தலைவர்களை நடத்தும் விதம் சரியில்லை. நாளை, முதல்வர் பதவியை, சித்தராமையா ராஜினாமா செய்வதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் எங்களுக்கு அந்த விஷயத்தில் ஆர்வம் இல்லை. காங்கிரசின் நிலை பரிதாபமாக உள்ளது. சித்தராமையா போனாலும், சிவகுமார் வந்தாலும் ஒன்றுதான்.
அழுது, கதறி இறுதியாக சிவகுமார் முதல்வராகிறார். முதல்வர் மாற்றத்தால், மாநிலத்தில் எந்த மாறுதலும் வந்து விடாது. இருவராலும், மாநிலத்துக்கு எந்த பயனும் இல்லை. இவர்களின் நாடகம், அதிக நாட்கள் நடக்காது.
அடுத்த, 2028 சட்டசபை தேர்தலில், பா.ஜ., 150 தொகுதிகளை கைப்பற்றி, ஆட்சிக்கு வரும்.
கர்நாடகாவில் தலித்துகளை, காங்கிரஸ் வெறும் ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறது. இன்று முதல்வராக்குவோம், நாளை முதல்வராக்குவோம், மற்றொரு தேர்தல் வரட்டும். அப்போது முதல்வராக்குவோம் என கூறியபடி, தலித் சமுதாயத்தினரை, காங்கிரஸ் ஏமாற்றுகிறது.
இக்கட்சியில் உள்ள தலித் தலைவர்களுக்கு, குறைந்தபட்சம் தைரியமும் இல்லை. 'இத்தனை நாட்களாக எங்களை மோசடி செய்தீர்கள். நாங்களும் முதல்வராக வேண்டும்' என, கட்சி மேலிடம் முன் நின்று கூறும் தைரியம், காங்கிரசில் யாருக்கும் இல்லை.
தலித்துகளுக்கு காங்கிரசில், எதிர்காலம் இல்லை. இவ்வளவு அவமானம் நடந்தும், இனியும் அக்கட்சியில் இருக்க வேண்டுமா; காங்கிரசின் தலித் தலைவர்களுக்கு வெட்கம் இல்லையா... இம்முறையாவது அவர்களை முதல்வராக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் தலைவர்களுக்கு , தன்மானம் இருந்தால், புதிய அமைச்சரவையில் யாரும் இடம் பெறக்கூடாது. இதன் மூலம் அவர்கள் தங்களின் எதிர்ப்பை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறக்கினால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் எதிரி என்ற, அவப்பெயர் ஏற்படும். ராகுலின் முடிவு தேசிய அளவில், காங்கிரசில் எதிரொலிக்கும். 'இண்டியா' கூட்டணியில் உள்ள, மற்ற பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் அதிருப்திக்கு காரணமாகலாம். சித்தராமையாவின் ராஜினாமா, காங்கிரசுக்கு தேசிய அளவில் பூமராங்காக மாறும். - பசவராஜ் பொம்மை, எம்.பி., - பா.ஜ.,
