/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் வௌ்ள பெருக்கு ஹெலிகாப்டரில் முதல்வர் ஆய்வு
/
கர்நாடகாவில் வௌ்ள பெருக்கு ஹெலிகாப்டரில் முதல்வர் ஆய்வு
கர்நாடகாவில் வௌ்ள பெருக்கு ஹெலிகாப்டரில் முதல்வர் ஆய்வு
கர்நாடகாவில் வௌ்ள பெருக்கு ஹெலிகாப்டரில் முதல்வர் ஆய்வு
ADDED : அக் 01, 2025 12:10 AM

கலபுரகி : ஜூன் 1ம் தேதி பருவமழை துவங்கியதில் இருந்து, தற்போது வரை, மாநிலத்தில் மழைக்கு 52 பேர் உயிரிழந்திருப்பதாக, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கனமழை, வெள்ளத்தால் கலபுரகி, விஜயபுரா, பீதர், யாத்கிர் ஆகிய கர்நாடகாவின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கலபுரகியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் சித்தராமையா ஹெலிகாப்டரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். பின், கலபுரகி கலெக்டர் அலுவலகத்தில், நான்கு மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின் முதல்வர் அளித்த பேட்டி:
வடமாவட்டங்களில் பெய்த கனமழையால் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. கலபுரகி, பீதர், யாத்கிர் ஆகிய மூன்று மாவட்டங்களில் 117 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண மையங்களில் 10 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் பருவமழை துவங்கியதில் இருந்து தற்போது வரை 52 பேர் இறந்துள்ளனர். அனைவரின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 422 கால்நடைகள் இறந்துள்ளன.
தற்போது பெய்த மழையால் 547 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பேரிடரை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க லெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெள்ளம் புகுந்த கிராமங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
சுகாதார பணியாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெள்ளம் பாதிப்பு குறித்து முழுமையா கணக்கெடுப்பு முடிந்த பின், மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.