முதல்வர் சித்தராமையா ராஜினாமா கோரி ஆகஸ்ட் 3ல்... பாதயாத்திரை! பெங்களூரு - மைசூரு ரோட்டில் பா.ஜ., - ம.ஜ.த.,வினர்
முதல்வர் சித்தராமையா ராஜினாமா கோரி ஆகஸ்ட் 3ல்... பாதயாத்திரை! பெங்களூரு - மைசூரு ரோட்டில் பா.ஜ., - ம.ஜ.த.,வினர்
ADDED : ஜூலை 29, 2024 05:08 AM

பெங்களூரு, : முதல்வர் சித்தராமையா ராஜினாமா கோரி, பெங்களூரில் இருந்து மைசூருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி, பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வினர் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட், 10ல் நடக்கும் நிறைவு விழாவில், முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பங்கேற்க உள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 'மூடா' என்ற மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் மைசூரு மற்றும் பெங்களூரில் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். சட்டசபையிலும், மேல்சபையிலும் முதல்வர் ராஜினாமா கோரி தர்ணாவும் நடத்தினர். அடுத்த கட்டமாக, பெங்களூரில் இருந்து, முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரு வரை பாதயாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைப்பு குழு
இதுகுறித்து, பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று பா.ஜ., - ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழுவினர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையில், பா.ஜ., பார்லிமென்ட் குழு உறுப்பினர் எடியூரப்பா, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏழு நாட்கள்
பின், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விஜயேந்திரா கூறியதாவது:
ஆகஸ்ட் 3ம் பெங்களூரில் இருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கிறோம். மைசூரு செல்வதற்கு ஏழு நாட்கள் தேவை.
மூத்த தலைவர்களான எடியூரப்பாவும், குமாரசாமியும், பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 10ம் தேதி மைசூரில் பிரமாண்டமான நிறைவு பொதுக்கூட்டம் நடக்கும். அன்றைய தினம் இரு கட்சிகளின் தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஊழல் ஆட்சியை ஒழிப்பதே எங்கள் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாண்டவமாடும் ஊழல்
முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
இந்த போராட்டத்தில், பொது மக்களும் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கிறேன்.
இரண்டு கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரள வேண்டும். முதல்வர் சித்தராமையா ராஜினாமா கடிதம் கொடுக்கும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம். முதல்வருக்கு மதிப்பு இருந்தால், தான் செய்துள்ள தவறை உணர்ந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தாண்டவமாடுகிறது. இந்த ஆட்சியை ஒழிக்கும் போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும். மக்கள் விழிப்புணர்வுக்காக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.