/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தைகள் தத்தெடுப்பு கர்நாடகாவில் அதிகரிப்பு
/
குழந்தைகள் தத்தெடுப்பு கர்நாடகாவில் அதிகரிப்பு
ADDED : நவ 14, 2025 05:07 AM
பெங்களூரு: பெங்களூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில், குழந்தைகளை தத்தெடுப்போர் எண்ணிக்கை, 72 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் குழந்தைகள் பற்றாக்குறை உள்ளது. குழந்தைக்காக ஆயிரக்கணக்கான தம்பதி காத்திருக்கின்றனர்,
இது குறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கர்நாடகாவில் அரசு சார்ந்த, 21 குழந்தை சிறப்பு தத்து மையங்கள், தனியாரின் 24 குழந்தை தத்து மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலமாக, தம்பதியர் குழந்தைகளை தத்து எடுக்கலாம்.
குழந்தைகள் இல்லாத தம்பதியருக்கு குழந்தைகளை தத்து கொடுப்பதே, இந்த மையங்களின் குறிக்கோளாகும். ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தாய், தந்தை கிடைப்பர். தற்போதைய தகவலின்படி, 2,279 தம்பதியர், குழந்தைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட, 55 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். தத்து கேட்போரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
பெரும்பாலான தம்பதியர், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க விரும்புகின்றனர். ஏன் என்றால் பச்சிளம் குழந்தைகளாக இருந்தால், பாசப்பிணைப்பு அதிகம் இருக்கும் என, நினைக்கின்றனர். சில ஆண்டுகளா க பெண் குழந்தைகளை தத்தெடுப்பது அதிகரிக்கிறது.
குழந்தைகளை தத்தெடுக்க சில நிபந்தனைகள் உள்ளன. தத்து பெற விரும்பும் தம்பதியருக்கு கடுமையான நோய் இருக்க கூடாது. எந்த விதமான குற்றப்பின்னணியும் இருக்க கூடாது. கணவன், மனைவி இருவரின் ஒப்புதலும் அவசியம்.
திருமணமாகாத பெண்கள், விவாகரத்து செய்து கொண்ட பெண்கள், எந்த குழந்தைகளை வேண்டுமானாலும் தத்து பெறலாம். ஆனால் திருமணமாகாத ஆண்கள், விவாகரத்து ஆன ஆண்களுக்கு, பெண் குழந்தைகள் தத்து அளிக்கப்படாது.
குழந்தைகளை தத்து பெற விரும்பும் தம்பதி, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருக்க வேண்டும். அவர்களின் வயதுக்கு தகுந்தபடி வெவ்வேறு வயதுள்ள குழந்தைகளை தத்து பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

