தண்டவாளத்தில் நின்ற பள்ளி பஸ் கிராமத்தினரால் பிழைத்த சிறார்கள்
தண்டவாளத்தில் நின்ற பள்ளி பஸ் கிராமத்தினரால் பிழைத்த சிறார்கள்
ADDED : ஆக 06, 2026 09:28 PM
விஜயபுரா: ரயில் தண்டவாளத்தின் நடுவில், பள்ளி பஸ் பழுதடைந்து நின்றதால், பதற்றமான சூழ்நிலை உருவானது. அந்த பகுதி கிராம மக்களின் உதவியால் மாணவர்கள் உயிர் பிழைத்தனர்.
விஜயபுரா மாவட்டம், இன்டி தாலுகாவின், ஹலசங்கி கிராமத்தில் இருந்து, தனியார் பள்ளி பஸ் ஒன்று, மாணவர்களை ஏற்றி கொண்டு, பள்ளியில் விடுவதற்காக நேற்று காலை புறப்பட்டது. பஸ்சில், 25க்கும் மேற்பட்ட சிறார்கள் இருந்தனர்.
லச்யானா கிராமத்தின் ரயில்வே லெவல் கிராசிங் அருகில், தண்டவாளத்தை கடந்த போது திடீரென பஸ் பழுதடைந்து முன்னோக்கி செல்ல முடியாமல் நின்றுவிட்டது.
தண்டவாளத்தின் நடுவிலேயே பஸ் நின்றதால், ஓட்டுநர் என்ன செய்வது என, தெரியாமல் பதற்றம் அடைந்தார்.
அடுத்த சில நிமிடங்களில், அதே பாதையில் ரயில் வரவிருந்தது. பஸ்சில் சிறார்கள் இருந்ததால், பதற்றமான சூழ்நிலை உருவானது. தண்டவாளம் நடுவே பள்ளி பஸ் நின்றிருப்பதை கண்ட அப்பகுதி கிராம மக்கள், விரைந்து ஓடி வந்தனர். தங்களின் உயிரை பணயம் வைத்து, பஸ்சில் சிறார்கள் இருக்கும் போதே, பஸ்சை தண்டவாளத்தில் இருந்து, துாரமாக தள்ளி சென்றனர்.
கிராமத்தினர் சிறிதும் தாமதிக்காமல், செயல்பட்டதால், 25க்கும் மேற்பட்ட பள்ளி சிறார்கள் உயிர் பிழைத்தனர்.
