
தொடர் வாய்ப்புகள்
நம்மனே யுவராணி தொடர் மூலமாக, நடிப்புலகில் கால் பதித்த நடிகை அங்கிதா அமர், வெள்ளித்திரைக்கு வந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று, பிசியான நடிகையாக வலம் வருகிறார், தற்போது உபேந்திராவுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து, அங்கிதா அமர் கூறுகையில், ''இன்னும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில், நடிகர் உபேந்திராவுடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இது நாகண்ணா இயக்கத்தில், சூரப்பா பாபு தயாரிப்பில் தயாராகிறது. இப்பனி தப்பித இளெயலி படத்தில் என் நடிப்பை பார்த்து, உபேந்திரா தன் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்தார், இது தவிர ஜஸ்ட் மேரிட் , அப ஜப டப உட்பட, சில படங்களில் நடிக்கிறேன். ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள்,'' என்றார்.
மறு வெளியீடு 'டிரெண்ட்'
ஒரு முறை திரையரங்குகளுக்கு வந்து, வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் சுருண்டு கொள்ளும் திரைப்படங்களுக்கு, இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். சமீப நாட்களாக ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற, பெறாத படங்களை ரீ ரிலீஸ் செய்யும் டிரென்ட் உருவாகியுள்ளது.
அந்த வரிசையில் சஞ்சு வெட்ஸ் கீதா - 2 வும் சேர்ந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி 17ல் திரைக்கு வந்த இத்திரைப்படம், சில வாரங்கள் கூட ஓடவில்லை. தற்போது 20 நிமிடம் கூடுதல் காட்சிகள் சேர்த்து, புதுப்பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இது குறித்து இயக்குனர் நாகசேகர் கூறுகையில், ''படத்துக்கு கதையே உயிர் நாடியாகும். நான் நினைத்தபடி கதையை கொண்டு செல்ல முடியவில்லை. அவசரமாக திரையிட்டோம். இப்போது முக்கிய காட்சிகளை சேர்த்து, புதிதாக கொண்டு வருகிறோம். இது ரசிகர்களுக்கு பிடிக்கும் என, நம்புகிறோம்,'' என்றார்.
மாறுபட்ட முயற்சி
புதுமுகங்கள் நடித்துள்ள, விருத்தா திரைப்படம் ஜூன் 6ம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. படத்தின் கதை குறித்து, படக்குழுவினரிடம் கேட்ட போது, 'இது எங்களின் மாறுபட்ட முயற்சி. சித்தார்த் என்ற கதாபாத்திரத்தை சுற்றிலும் கதை நகர்கிறது. கதாபாத்திரதை சுற்றிலும் உள்ள சூழ்நிலையும் ஒரு கதாபாத்திரமாக்க காட்டப்பட்டுள்ளது.
'நாயகன் செய்யும் ஒரு தவறு, அவரது வாழ்க்கையை எப்படி திசை திருப்புகிறது என்பதே, கதையின் சாராம்சமாகும். நாயகன் சித்தார்த்தாக மாஹிர் மொய்தீனும், பிரியா கதாபாத்திரத்தில் நடிகை ஹரிணியும் நடித்துள்ளனர். திகில், திரில்லர் கதை கொண்டதாகும்' என்றனர்.
முதன்முறை வில்லன்
கடந்த 2003ல், நடிகர் சிவராஜ்குமார் நடித்த ஸ்ரீராம் என்ற படத்தில், சிறிய கதாபாத்திரம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் மித்ரா. தற்போது இவர் பிசியான நடிகர் மட்டுமல்ல. சொந்தமாக படக்கம்பெனி துவக்கி, திரைப்படங்கள் தயாரிக்கிறார். இப்போது பிரஜ்வல் தேவராஜ் நடிப்பில் 'கராவலி' படத்தில் நடிக்கிறார்.
இது குறித்து, மித்ராவிடம் கேட்டபோது, ''இதுவரை நகைச்சுவை நடிகராக நடித்த நான், இப்போதே முதன் முறையாக, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது தவிர ஏழெட்டு படங்களில், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். படத்தின் போஸ்டர் வெளியான பின், எனக்கு வில்லன் கதாபாத்திரங்கள் அதிகமாக தேடி வருகிறது, என் இயற்பெயர் ஷினு ஜார்ஜ். நண்பர்கள் மித்ரா என, அழைத்ததால் அதே பெயர் நிலைத்துவிட்டது,'' என்றார்.
நடிக்க வந்தது ஏன்?
குடகு மாவட்டம், கன்னட திரையுலகுக்கு பல நடிகையரை கொடுத்துள்ளது. இப்போது புதிதாக வந்துள்ளவர் மவுனா குட்டமனே. சின்னத்திரையில் நடித்த இவர், வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ''மங்களூரில் படிக்கும் போது, மாடலிங் செய்தேன். நான் ஆசைப்பட்டு நடிகையாகவில்லை. ராணுவத்தில் சேர வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.
''என் குடும்பத்தில் பலர் ராணுவத்தில் உள்ளனர். எதிர்பாராமல் சின்னத்திரையில் நடித்தேன். அதன்பின் யோகராஜ் பட் தயாரிக்கும், குலதல்லி கீள்யாவுதோ படத்தில் அழைப்பு வந்தது. அவரது தயாரிப்பில் உருவாகும் பட வாய்ப்பை இழக்க, மனம் வராமல் நடிக்க சம்மதித்தேன்,'' என்றார்.
கிராமத்து அத்தியாயம்
கன்னடத்தில் எப்போதாவது, கிராமத்து பின்னணி கொண்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. தற்போது திரைக்கு தயாராகும் 'குன்டேபில்லே' திரைப்படமும், கிராமத்து பின்னணி கொண்டதாகும்.
இது பற்றி இயக்குனர் சித்தேகவுடா கூறுகையில், ''கிராமத்து மக்களின் வாழ்க்கை தரம், கலாசாரத்தை காட்டியுள்ளோம். யது நாயகனாகவும், இவருக்கு ஜோடியாக மேகஸ்ரீயும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது. வரும் ஜூனில் திரையிட திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.