
ரசிகர்களுக்கு
அறிவுரை
கன்னட திரையுலகின் பிரபல இயக்குநர் பிரேம். இவரது படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இவரது பிறந்த நாள். ரசிகர் ஒருவர் தன் ரத்தத்தால், பிரேமின் உருவத்தை வரைந்து, வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவியுள்ளது. இதை அவர் கண்டித்துள்ளார். 'என் மீது ரசிகர் இவ்வளவு அன்பு வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அவர்களின் அன்பை இது போன்று காட்டுவது தவறு. யாரும் இத்தகைய செயலை செய்யாதீர்கள்' என, அறிவுரை கூறியுள்ளார்.
மீண்டும்
டாக்டர்
நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் டேட் திரைப்படத்தின் போஸ்டர், சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதை பற்றி படக்குழுவினர் கூறுகையில், 'இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் அனில் கின்னேகன்டி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின் சிவராஜ்குமார் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷர்மிளா மான்ட்ரே, பேபி நட்சத்திரா மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே மைசூரு, நந்திமலையில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை துவக்குவோம்' என்றனர்.
மலரும்
நினைவுகள்
நடிகரும், அரசியல்வாதியுமான ஜக்கேஷ், தான் சிறு வயதில் வளர்ந்த பழைய ஓட்டு வீட்டை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 'இதே திண்ணை தான், என் விளையாட்டு மைதானம். ராகி ரொட்டி, சட்னி, வெண்ணெய் தின்று வளர்ந்தேன். என் பாட்டி சீயக்காய் அரைத்து குளிப்பாட்டுவார். திண்ணையில் பாய் விரித்து, நட்சத்திரத்தை பார்த்தபடி படுத்திருப்போம்.
'என் தாத்தா கதைகள் சொல்லி, 'துருவ நட்சத்திரத்தை போன்று வளர வேண்டும்' என, வாழ்த்தினார். இந்த வீட்டில் தான், என் தந்தை, தன் தங்கைகளுக்கு திருமணம் செய்தார். ஊரின் ஹனுமந்த சுவாமி கோவில் முன் நாடகங்கள் நடக்கும். பலரும், உங்களுக்கு என்ன, பணம் இருக்கிறது. மகிழ்ச்சியாக வாழ்கிறீர்கள்' என, 'கமென்ட்' செய்கின்றனர். இவர்கள் நான் கடந்து வந்த கரடுமுரடான பாதையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்' என, பதிவிட்டுள்ளார்.
நடிகையின்
விருப்பம்
தமிழ், கன்னடம் என, பல மொழிகளில் நடித்தவர் சாயா சிங். இப்போதும் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு உள்ளது. கன்னடம், தமிழ் சின்னத்திரை தொடரில் நடிக்கிறார். ஜீ கன்னடா குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சி மேடையில் நடிகர்கள் சிவராஜ் குமார், உபேந்திரா இருந்தனர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட சாயா சிங், உபேந்திராவுடன் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என, விருப்பம் தெரிவித்தார். இதற்கு உபேந்திராவும் சம்மதித்தார்.
பாடலாசிரியரான
நடிகர்
நடிகர் ரூபேஷ் ஷெட்டி இயக்கி, நடிக்கும், ஜெய் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதுகுறித்து, அவர் கூறுகையில், இந்த படம் கன்னடம், துளு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் பாடல் வெளியிட்டுள்ளோம். இந்த பாடலை துளுவில் நானே எழுதியுள்ளேன். கன்னடத்தில் கீர்த்தன் பண்டாரி எழுதியுள்ளார். படத்தில் எனக்கு ஜோடியாக அத்விதி ஷெட்டி நடித்துள்ளார். பத்திரிக்கையாளராக அத்விதி ஷெட்டி நடிக்கிறார்,” என்றார்.
உறவுகளின்
மகத்துவம்
பெரும்பாலும் புதியவர்களே நடிக்கும், 4:30 - 6:00 முகூர்த்தா நால்வரு காணுத்தில்லா என்ற திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இதுகுறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'இது உறவுகளின் மகத்துவத்தை விவரிக்கும் கதை கொண்டதாகும். இதற்கு முன்பு வீடு வீடாக சென்று, திருமண அழைப்பிதழ் கொடுப்பர். இப்போது மொபைல் போனில் அனுப்புகின்றனர். அன்றைய, இன்றைய உறவுகளின் தன்மை குறித்து, படத்தில் காட்டியுள்ளோம். பட போஸ்டரை வெளியிட்டுள்ளோம்' என்றனர்.

