
நகைச்சுவை கலந்த கதை!
விநாயக் இயக்கும், புல் மீல்ஸ் திரைப்படம் நவம்பர் 21ல், திரைக்கு வருகிறது. படத்தின் கதை குறித்து, இயக்குநர் கூறுகையில், ''இந்த படத்தில் லிகித் ஷெட்டி நாயகனாக நடிப்பதுடன், தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளார். குஷி ரவி, தேஜஸ்வினி சர்மா நாயகியராக நடித்துள்ளனர். ப்ரீ வெட்டிங் ஷூட்டிங்குக்காக, போட்டோ கிராபர் ஒருவர், வெளியூருக்கு பயணிக்கிறார். அப்போது இவர் மீது மணமகளுக்கு காதல் ஏற்படுகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்களே கதையாகும். நகைச்சுவை கலந்த காதல் கதை கொண்டது. போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் லிகித் ஷெட்டி நடித்துள்ளார்,'' என்றார்.
மீண்டும் 'எஜமானா'
கடந்த 2000ல் நடிகர் விஷ்ணுவர்தன் நடிப்பில் திரைக்கு வந்த, எஜமானா திரைப்படம், அமோக வெற்றி பெற்றது. வசூலை அள்ளியது. இதனை மீண்டும் திரையிட, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தயாரிப்பாளர் ரெஹ்மான் கூறுகையில், எஜமானா' 130க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள், 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 வாரம், நான்கு இடங்களில் ஓராண்டு தொடர்ந்து ஓடியது. 25 ஆண்டுகளுக்கு முன்பே, 35 கோடி ரூபாய் வசூலான படம் இது. இந்த படத்தை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, புதுப்பொலிவுடன் மீண்டும் திரையிட திட்டமிட்டுள்ளோம். ரசிகர்கள் வரவேற்பார்கள் என, நம்புகிறோம், என்றார்.
அதிர்ஷ்ட தேவதை!
காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹர்ஷிகா பூனச்சா, புவன் பொன்னண்ணா தம்பதிக்கு, கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் மகளின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர். ரமேஷ் அரவிந்த், மாலாஸ்ரீ, யோகராஜ்பட், பிரியங்கா உபேந்திரா உட்பட, பல நட்சத்திரங்கள் விழாவுக்கு வந்து, குழந்தையை வாழ்த்தினர். இது குறித்து, புவன் பொன்னண்ணா கூறுகையில், ''என் மகள் திரிதேவி பொன்னக்கா பிறந்த பின், என் அதிர்ஷ்டமே மாறியது. ஒன்றன் பின் ஒன்றாக, பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. என் மகள் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளாள், என்றார்.
'மிடில் கிளாஸ் ராமாயணா'
சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்கு வந்த நடிகை மோக்ஷிதா பை, அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு பெறுகிறார். இது பற்றி, அவர் கூறுகையில், ''ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளேன். தற்போது 'மிடில் கிளாஸ் ராமாயணா' என்ற படத்தில் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதில் பரத்குமார் நாயகனாக நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. லொகேஷன் தேர்வு செய்யப்பட்ட பின், படப்பிடிப்பு துவங்கும். படத்தின் கதை சாராம்சம் உட்பட, மற்ற விஷயங்கள் விரைவில் பகிர்ந்து கொள்வோம், என்றார்.
உண்மை சம்பவத்தில் கதை!
ரகு கோவி இயக்கும், ரூபி திரைப்பட டைட்டில், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதுவரை ஸ்க்ரிப்ட் எழுதிய இவர் இப்போது முதன் முறையாக, படம் இயக்குகிறார். இது பற்றி அவர் கூறுகையில், ''பிரபல இயக்குனர்கள் ராஜேந்திர சிங் பாபு, ராஜசேகர், ராஜு, உபேந்திரா உட்பட பல இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை வைத்து, படம் இயக்கியுள்ளேன். ஹைதராபாத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. ராம்கவுடா நாயகனாக, இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடிக்கின்றனர்,'' என்றார்.
கிறிஸ்துமஸ் ரிலீஸ்!
சின்னத்திரை, வெள்ளித்திரையில் அடையாளம் காணப்பட்ட நடிகர் கிரண்ராஜ், நாயகனாக நடிக்கும் ஜாக்கி 42 திரைப்பட டீசர், சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இவருக்கு ஜோடியாக ஹிருதிகா சீனிவாஸ் நடித்துள்ளார். கதை குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'இது குதிரை ஓட்டப்பந்தயத்தை மையமாக கொண்டது. இதில் கிரண்ராஜ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துள்ளது. இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கியுள்ளது. கிறிஸ்துமஸ் நேரத்தில் திரைக்கு வரும், என்றனர்.

