குட்கா, பான் மசாலா தடை திரும்ப பெற முதல்வர் உத்தரவு
குட்கா, பான் மசாலா தடை திரும்ப பெற முதல்வர் உத்தரவு
ADDED : ஆக 15, 2026 04:52 AM
பெங்களூரு: பாக்கு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அரசு மீது கொடுத்த அழுத்தத்தால், குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடையை திரும்ப பெற, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக அரசின் சுகாதார துறை, பொது சுகாதார நலன் கருதி, புகையிலை அல்லது நிக்கோடின் அடங்கிய குட்கா, பான் மசாலாவை விற்பனை செய்ய, ஓராண்டிற்கு தடை விதித்து, கடந்த மாதம் 10ம் தேதி அரசாணை வெளியிட்டது.
இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்ததுமே, கர்நாடகாவில் பாக்கு விலை சரிந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் அதிகம் பாக்கு விளைச்சலை கொண்ட ஷிவமொக்கா, தாவணகெரே, சித்ரதுர்கா, உத்தர கன்னடா, துமகூரு, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் சிவகுமாரை நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினர்.
குட்கா, பான் மசாலா தயாரிப்பில் பாக்கு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தின், 10 மாவட்டங்களில், 145 தாலுகா விவசாயிகளும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் பாக்கு விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்.
குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை, பாக்கு விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இதனால் குட்கா, பான் மசாலா மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்ட முதல்வர், எனது கவனத்திற்கு வராமலேயே சுகாதார துறை தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது என்று கூறி, எம்.எல்.ஏ.,க்கள் முன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சுகாதார துறை உயரதிகாரிகளை அழைத்தும் விளக்கம் கேட்டார். அதிகாரிகள் தரப்பில் சரியான தகவல் கொடுக்கப்படவில்லை.
கோபம் அடைந்த முதல்வர், குட்கா, பான் மசாலா மீதான தடை உத்தரவை நீக்க கோரி, வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வ அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளது.
