/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.சி.பி., கூட்ட நெரிசல் குறித்த முதல்வர் விளக்கம் ஏற்க மறுப்பு பா.ஜ., - ம.ஜ.த., வெளிநடப்பு; சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு
/
ஆர்.சி.பி., கூட்ட நெரிசல் குறித்த முதல்வர் விளக்கம் ஏற்க மறுப்பு பா.ஜ., - ம.ஜ.த., வெளிநடப்பு; சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு
ஆர்.சி.பி., கூட்ட நெரிசல் குறித்த முதல்வர் விளக்கம் ஏற்க மறுப்பு பா.ஜ., - ம.ஜ.த., வெளிநடப்பு; சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு
ஆர்.சி.பி., கூட்ட நெரிசல் குறித்த முதல்வர் விளக்கம் ஏற்க மறுப்பு பா.ஜ., - ம.ஜ.த., வெளிநடப்பு; சட்டசபை கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : ஆக 23, 2025 06:33 AM

பெங்களூரு: ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் சித்தராமையா அளித்த விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சியினர், வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் விதி 69ன் கீழ் நேற்று நடந்த விவாதம்:
முதல்வர் சித்தராமையா:
ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. நாங்களும் வேதனை அடைந்துள்ளோம். இச்சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும்; முதல்வர், துணை முதல்வர், உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது சரியல்ல.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்:
அரசின் அஜாக்கிரதையால், 11 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். தன் தவறை, முதல்வர் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கவில்லை. தன் தவறை ஒப்புக் கொண்டிருந்தால், மஹாத்மா காந்தி கூறியது போன்று சிறந்த மனிதன் ஆகியிருக்கலாம்.
முதல்வர்:
இவ்விஷயத்தில், நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் சிறப்பாக பதிலளித்திருந்தார். பா.ஜ., உறுப்பினர் சுரேஷ் குமார், என்னை தீய செயல்களை துாண்டுபவர் என்று விமர்சித்தார்.
ஷேக்ஸ்பியரின் கதையில் மார்க் அந்தோணி பேசுவது போன்று, அவர் பேசுகிறார். முதல்வருக்கு மனிதநேயம் அல்லது இதயம் இருந்திருந்தால், கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டிருப்பார் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
சம்பவம் நடந்த அன்றே நான் வருத்தம் தெரிவித்தேன். இத்தகைய சம்பவம் நடந்திருக்கக் கூடாது. என் 42 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. இதனால் அன்று முழுதும் வருத்தம் அடைந்தேன். அன்றைய தினம் தோசை சாப்பிட ஹோட்டலுக்கு சென்றதாக குற்றம் சுமத்துவது வருத்தம் அளிக்கிறது.
இச்சம்பவம் கேள்விப்பட்ட உடனேயே, போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டேன். சிலர் இறந்ததாக தெரிவித்தபோது, வருத்தம் அடைந்தேன்.
சிறுவன் உயிரிழந்தது மிகவும் பாதித்தது. உள்துறை அமைச்சருடன் மருத்துவமனைக்கு சென்றேன். பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தலைமையில் மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு உத்தரவிட்டேன். பின், முன்னாள் நீதிபதி குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷனும் அமைத்தேன். இச்சம்பவத்துக்கு யார் காரணம் என்பது மக்களுக்கு தெரியும்.
ஜூலை 10, குன்ஹாவும்; ஜூலை 11ம் தேதி மாவட்ட கலெக்டர் ஜெகதீஷும் அறிக்கை சமர்ப்பித்தனர். மாநில உயர் நீதிமன்றமும், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதை, சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைத்தவுடன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம்.
ஆர்.சி.பி., அணி, கே.எஸ்.சி.ஏ., மற்றும் டி.என்.ஏ., நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதில் சிலரை கைது செய்தோம். அவர்கள் அனைவரும் தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர்.
உலகளவில் ஆர்.சி.பி.,க்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஆர்.சி.பி., வெற்றி பெற்றபோது, அன்றைய தினம் இரவு முழுதும் கொண்டாடினர். இதன் வெற்றி, விதான் சவுதா முன் கொண்டாடப்பட்டது. மழை காரணமாக, 10 நிமிடத்தில் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. பா.ஜ.,வும், ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்ட ஊர்வலத்துக்கு அனுமதி தரவில்லை என்று தன் 'எக்ஸ்' தளத்தில் குறிப்பிட்டிருந்தது. இப்போது எதிர்க்கட்சியினர் எங்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், கும்ப மேளா, குஜராத், பீஹார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் கூட்ட நெரிசல் சம்பவங்கள் நடந்துள்ளன. பா.ஜ., ஆட்சி செய்த இம்மாநிலங்களில், அக்கட்சியினர் யாராவது ராஜினாமா செய்தார்களா அல்லது மன்னிப்பு கேட்டார்களா?
கொரோனா நேரத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில், குஜராத் டைட்டன் வெற்றி பெற்றது. அப்போது நடந்த வெற்றி ஊர்வலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரது மனைவி, அப்போதைய முதல்வர் பூபேந்திர பாட்டீல் உட்பட பலர் பங்கேற்றனர். நுாற்றுக்கணக்கானோர் கொரோனாவால் இறக்கவில்லையா?
கடந்த 2020ல் அமெரிக்க அதிபர் டிரம்பை வரவழைத்து நிகழ்ச்சி நடத்தினார். அப்போது கொரோனாவால் யாரும் இறக்கவில்லையா? இவர்கள் எல்லாம் ராஜினாமா செய்தார்களா? அவர்களை ஏன் துாண்டுபவர்கள் என்று அழைக்கவில்லை.
கொரோனா காலத்தில் சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனையில், உயிர் காக்கும் ஆக்சிஜன் இல்லாததால், 36 பேர் உயிரிழந்தனர். அப்போது சுரேஷ் குமார், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தார். சுகாதார துறை அமைச்சராக சுதாகர் இருந்தார். இவர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை? முதல்வராக பசவராஜ் பொம்மையும், சுதாகரையும் ஏன் 'துாண்டுபவர்' என்று சுரேஷ் குமார் அழைக்கவில்லை.
குறுக்கிட்ட சுரேஷ் குமார்:
சாம்ராஜ்நகர் சம்பவத்தை தொடர்ந்து நடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது, கண்ணீர் சிந்தினேன்.
முதல்வர்:
ஹாவேரியில் உரம் கேட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினீர்கள். நடிகர் ராஜ்குமார் மறைவின்போது நடந்த துப்பாக்கி சூட்டிலும் பலர் கொல்லப்பட்டனர். அப்போது குமாரசாமி முதல்வராகவும், எடியூரப்பா துணை முதல்வராகவும் இருந்தனர். இவர்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை?
எந்த விஷயத்தையும் அரசியலாக்கக் கூடாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எங்களுக்கு பாடம் நடத்தாதீர்கள். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.
விதான் சவுதா முன் நடந்த பாராட்டு விழாவில், கவர்னருக்கு நான் அழைப்பு விடுத்தேன். அதிகளவில் மக்கள் கூடியதால், சொல்வதை கேட்கும் நிலையில் ரசிகர்கள் இல்லை. இச்சம்பவத்தில் அரசின் தவறு எதுவும் இல்லை. பா.ஜ.,வில் புத்திசாலிகளுக்கு இடமில்லை.
இந்நிலையில், ஆர்.சி.பி., சம்பவத்துக்கு முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்காததை கண்டித்து, எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
ஒன்பது நாள் கூட்டத்திற்கு பிறகு, நேற்று மாலையில் சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.