பெங்களூரு வளர்ச்சிக்காக ரூ.1.50 லட்சம் கோடியில் திட்டங்கள் சுரங்கப்பாதை பூமி பூஜை விழாவில் முதல்வர் சிவகுமார் தகவல்
பெங்களூரு வளர்ச்சிக்காக ரூ.1.50 லட்சம் கோடியில் திட்டங்கள் சுரங்கப்பாதை பூமி பூஜை விழாவில் முதல்வர் சிவகுமார் தகவல்
ADDED : ஜூன் 28, 2026 10:57 PM

பெங்களூரு: பெங்களூரின் பல்லாரி சாலையில் உள்ள ஹெப்பால் சந்திப்பில் இருந்து, யு.ஏ.எஸ்., வேளாண் அறிவியல் பல்கலைக்கழக பணியாளர் குடியிருப்பு வரை, 2.28 கி.மீ.,க்கு, சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு, முதல்வர் சிவகுமார் நேற்று பூமி பூஜை செய்தார். நகரின் வளர்ச்சிக்காக, 1.50 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாக, அப்போது அவர் கூறினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
பெங்களூரின் நுழைவுவாயிலாக ஹெப்பால் மாறி வருகிறது. இப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நாங்கள் ஓரளவு தீர்வு கண்டுள்ளோம். புதிதாக அமைய உள்ள, 2.28 கி.மீ., சுரங்க பாதை, பி.டி.ஏ.,வால் அமைக்கப்படும்.
சுரங்கப்பாதையில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. மக்கள் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வர உற்சாகமாக பணியாற்றுகிறோம்.
பெங்களூரின் வளர்ச்சிக்காக அடுத்த, 50 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுத்து வருகிறோம். கெம்பே கவுடா தற்போது நம்முடன் இல்லை. ஆனால் அவர் செய்த பணிகள் நம்முடன் உள்ளன.
கடபகெரே கிராசில் இருந்து செல்லகட்டா வரை, 10 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எஸ்.எம்.கிருஷ்ணா பெயரை சூட்டியுள்ளோம். இந்த சாலை திட்டத்தை 2006ல் செய்து இருந்தால், 3,000 கோடி ரூபாயில் முடிந்திருக்கும். ஆனால் இப்போது, 24,000 கோடி ரூபாயாகி விட்டது.
20 கொட்டகைகள் ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு வரை சுரங்க பாதை சாலை அமைக்க முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நான்கு ஆண்டுகளில் முடியும். அந்த பாதையில் செல்வோர் பணம் செலுத்த வேண்டும்.
சுரங்க சாலை மக்கள் நேரத்தை மிச்சப்படுத்தும். பெங்களூரின் வளர்ச்சிக்காக, 1.50 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்களை வகுத்து உள்ளோம்.
பெங்களூரில் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். நகரில் குப்பை பிரச்னை உள்ளது. அதை தீர்க்க எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தனர்... குப்பை டெண்டர் விவகாரத்தில் நான், 10,000 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார்.
இவ்வளவு பணத்தை சேமிக்க, 20 பெரிய கொட்டகைகள் தேவைப்படலாம். எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
