நீர் பாசன திட்டங்களுக்கு அனுமதி வேண்டும் மத்திய அரசிடம் முதல்வர் சிவகுமார் கோரிக்கை
நீர் பாசன திட்டங்களுக்கு அனுமதி வேண்டும் மத்திய அரசிடம் முதல்வர் சிவகுமார் கோரிக்கை
ADDED : ஜூன் 12, 2026 10:49 PM

-நமது நிருபர் -:
கர்நாடகாவின் மிக முக்கியமான நீர்ப்பாசன திட்டங்களான மேகதாது, கிருஷ்ணா மேலணை, பத்ரா மேலணை, மஹதாயி திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்படி, கர்நாடக முதல்வர் சிவகுமார், மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கர்நாடக முதல்வர் சிவகுமார், நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக, மேகதாது திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும் என, உறுதிபூண்டுள்ளார். இதற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக, மாநில அரசு பல ஆண்டுகளாக காத்திருக்கிறது.
புதிய முதல்வராக பொறுப்பேற்ற சிவகுமார், டில்லி சென்றுள்ளார். நேற்று முன் தினம் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
கர்நாடகாவின் முக்கிய திட்டங்களுக்கு, நிதியுதவி கோரினார். நேற்று மத்திய ஜல்சக்தி அமைச்சர், சி.ஆர். பாட்டீலை சந்தித்தார். மாநிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான நீர்ப்பாசன திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வரின் முக்கிய கோரிக்கைகள்:
உச்ச நீதிமன்றம், 2025ம் ஆண்டு, டிசம்பர் 13ம் தேதியன்று, தமிழகத்தின் பல்வேறு மனுக்களை தள்ளுபடி செய்தது. மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிப்பது குறித்து, மத்திய நீர் ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்யும்படி, கருத்து தெரிவித்துள்ளன.
திட்டத்தை பற்றி ஆய்வு செய்யும்படி, காவிரி மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. எனவே மேகதாது திட்டத்துக்கு, விரைந்து அனுமதி அளிக்க வேண்டும்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு குறித்து, கிருஷ்ணா தீர்ப்பாயம் தீர்ப்பளித்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. ஆனால், இந்த தீர்ப்பை இதுவரை அரசிதழில், மத்திய அரசு வெளியிடவில்லை.
கர்நாடக அரசு கிருஷ்ணா மேலணை திட்டத்தின், மூன்றாவது கட்டத்துக்கு பெருந்தொகையை முதலீடு செய்துள்ளது. எங்கள் திட்டத்தை தொடரவும், எங்கள் பங்கு நீரை பயன்படுத்தவும், மத்திய அரசின் ஒத்துழைப்பு அவசியம்.
பத்ரா மேலணை திட்டத்துக்கு, மத்திய அரசு, 2023 - 24ம் ஆண்டு பட்ஜெட்டில், 5,300 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்தது. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், அந்த நிதியை மாநிலத்துக்கு வழங்கவில்லை.
இத்திட்டத்துக்கு, 21,167.93 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில், நிதியுதவி வழங்க வேண்டும்.
மஹதாயி நதி நீர் பாசனத்தின், கலசா - பண்டூரி கால்வாய் திட்டங்கள் மூலம், ஹூப்பள்ளி - தார்வாட் மாவட்டத்துக்கு, குடிநீர் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு, 2022ன் டிசம்பரில் மத்திய ஜல்சக்தி துறை அனுமதி அளித்தும், திட்டத்துக்கு எந்த சட்ட சிக்கலும் இல்லாத நிலையிலும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதன் விளைவாக, எங்கள் பங்கு நீரை பயன்படுத்தி, ஹூப்பள்ளி - தார்வாடுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. எனவே விரைவில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சொந்தி ஏற்ற நீர் பாசனம், இன்டி கிளை கால்வாய், மல்லபிரபா கால்வாய் பாக்கியுள்ள பணிகள், கட்டப்பிரபா வலதுபுற கால்வாய், சிக்கோடி கிளை கால்வாய், துங்கபத்ரா கால்வாய் பாக்கி பணிகள், பென்னேஹள்ளா ஆற்றின் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.
மத்திய அரசின் நதிகள் இணைப்பு திட்டங்களின் கீழ், நீரை பங்கிடும் போது, கர்நாடகாவுக்கு நியாயமான பங்கை நிர்ணயிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை, கர்நாடக முதல்வர் சிவகுமார், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரிடம் வைத்துள்ளார்.
