
நடிகர் அஜய் ராவ், யுத்தா திரைப்படத்தை முடித்து, தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்துக்கு சரளா சுப்புராவ் என, டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 1971 கால கட்டத்தில் நடக்கும் கதையாகும். சரளா, சுப்புராவ் படத்தின் நாயகி, நாயகனின் பெயராகும். அதே பெயரை படத்துக்கு சூட்டி உள்ளனர். கதைக்கு அஜய்ராவ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியதால் இயக்குநர் மஞ்சு சுவராஜ், அஜய் ராவை சந்தித்து கதையை கூறினார். மாறுபட்ட கதையாக இருந்ததால், அவரும் நடிக்க சம்மதித்தார். பஞ்சாபை சேர்ந்த மிஷா நாரங்க் நடித்துள்ளார். இப்படம் தன் தொழில் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருக்கும் என, இயக்குநர் நம்புகிறார்.
நடிகர் துருவா சர்ஜா நடிக்கும், 'கேடி' படக்குழுவினர், சுவிட்சர்லாந்தில் முகாமிட்டுள்ளனர். இங்குள்ள அழகான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்பயணம் ஷூட்டிங் மற்றும் சுற்றுலாவாகவும் அமைந்துள்ளது. துருவா சர்ஜா, தன் மனைவி பிரேர்ணாவுடன், இயக்குநர் பிரேம் தன் மனைவி ரக்ஷிதா, மகனுடன் வந்துள்ளார். இவர்கள் ஓய்வு நேரத்தில் ஊரை சுற்றி பார்க்கின்றனர். அதே போன்று நாயகி ரீஷ்மா நானய்யாவும், பல இடங்களை சுற்றிப்பார்க்கிறார். இந்த படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் படப்பிடிப்பு தாமதமானதால், ரிலீஸ் தேதி தள்ளி போகிறது. இதில் ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், பாலிவுட்டின் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி என, நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
நடிகர் பிருத்வி அம்பர், நடிகை தன்யா ராம்குமார் நடிக்கும், சவுகிதாரா திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இதில் மிரட்டலான கதாபாத்திரத்தில் பிருத்வி அம்பர் தோன்றுகிறார். நீண்ட இடைவெளிக்கு பின், இப்படம் மூலமாக நடிகை ஸ்வேதா கன்னடத்துக்கு திரும்பி உள்ளார். இதில் மூத்த நடிகை சுதாராணி, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் ஆடியோ உரிமை பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. லஹரி ஆடியோ நிறுவனத்தின் அங்கமான எம்.ஆர்.டி., மியூசிக் நிறுவனம், சவுகிதாரா படத்தின் ஆடியோவை வாங்கியுள்ளது. இதனால் படக்குழுவினர் குஷியில் உள்ளனர்.
கல்லுாரியில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு, காலேஜ் கலாவிதா திரைப்படம் தயாராகியுள்ளது. சமீபத்தில் பாடல்கள் வெளியாயின. படத்தை பார்ப்போருக்கு, அவரவர் கல்லுாரி நாட்கள் கண் முன்னே வந்து செல்லுமாம். பல படங்களில் வசனகர்த்தா, உதவி இயக்குநராக பணியாற்றிய சஞ்சய் மளவள்ளி, முதன் முறையாக, திரைப்படத்தை இயக்கியுள்ளார். சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள ஆரவ் சூர்யா, நாயகனாகவும், இவருக்கு ஜோடியாக சைத்ரா லோகநாதனும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது; விரைவில் திரைக்கு வரும்.
பிரணம் தேவராஜ் நாயகனாக நடித்துள்ள, சன் ஆப் முத்தண்ணா படப்பாடலை சஞ்ஜித் ஹெக்டே பாடியுள்ளார். படத்தின் பாடல் மற்றும் டீசர் ஏற்கனவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது; விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது. தந்தை, மகனின் பாசப்பிணைப்பை மையாக கொண்ட கதையாகும். மூத்த நடிகர் ரங்காயணா ரகு, நாயகன் பிரணம் தேவராஜின் தந்தையாக நடித்துள்ளார். குஷி ரவி நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் வாரிசுகள், திரையுலகில் நுழைவது புதிய விஷயம் அல்ல. தங்களின் மகள் அல்லது மகனுக்காக, படம் தயாரிப்பில் ஈடுபடுவதும் உண்டு. அதே போன்று மூத்த இயக்குனர் ராஜேஷ் மூர்த்தி, தன் மகன் யஷஸை ஹீரோவாக்கும் நோக்கில், பிளடி பாபு என்ற படத்தை இயக்கி, தயாரிக்கிறார். இது ஆக்ஷன், சைக்கலாஜிகல், திரில்லர் கதை கொண்டதாகும். பெங்களூரு, சிக்கமகளூரு, நந்தி மலை சுற்றுப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜூனில் படம் திரைக்கு வருகிறது. ஸ்மிதா நாயகியாக நடிக்கிறார்.