
* மறுமணம் எப்போது?
கன்னட திரையுலகில் ஜொலித்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, நடிகை மேக்னா ராஜ் காதலித்து திருமணம் செய்தவர்கள். மேக்னா கர்ப்பிணியாக இருக்கும்போதே, சில ஆண்டுகளுக்கு முன்பு சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் காலமானார். இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மேக்னா, மகனை வளர்த்து வருகிறார்.
இதற்கிடையே இவர் மறுமணம் செய்ய தயாராவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, “மறுமணம் செய்து கொள்ளும்படி, குடும்பத்தினர் எனக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். மற்றவரை போன்று நானும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது, அவர்களின் ஆசையாகும். வருங்காலத்தில் சிரஞ்சீவி சர்ஜா போன்று, ஆண் கிடைத்தால் தகுதியானவராக இருந்தால், நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்,” என்றார்.
* புரட்சியாளர் வேடம்
நீனாசம் சதீஷ் மற்றும் சப்தமி கவுடா இணைந்து நடிக்கும், 'தி ரைஸ் ஆப் அசோகா' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளன. ஜூலை 18ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கதை குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'ஆகாஷ் ஸ்டூடியோவில் டப்பிங் பணிகள் முடிந்தன. ராஜ்குமார், விஷ்ணு வர்த்தன் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்களின் படங்கள் டப்பிங் செய்த இதே ஸ்டூடியோவில் டப்பிங் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது 1970 மற்றும் தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் கதையாகும். புரட்சியாளர் வேடத்தில் நீனாசம் நடித்துள்ளார்' என்றனர்.
* நாயகனாக அறிமுகம்
நடிகர் கிரிஷ் பிரகாஷ் பஸ்மே, இதுவரை கிடைத்த வேடங்களில் தலைகாட்டியவர். இப்போது, முதன் முறையாக நாயகனாக அறிமுகமாகிறார். இதுதொடர்பாக, அவர் கூறுகையில், “இதுவரை எனக்கு குறிப்பிடும்படியான கதாபாத்திரம் கிடைத்தது இல்லை. தற்போது 'திம்மண்ணா டாக்ட்ரு' படத்தில் நாயகனாக நடிக்கிறேன். மோகன்குமார் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார். இதில் காமெடி, சென்டிமென்ட், காதல் என, அனைத்தும் உள்ளன. எனக்கு ஜோடியாக பாவனி நடித்துள்ளார். சென்சார் முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது,” என்றார்.
* நடிப்பது மகிழ்ச்சி
கன்னடத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் சேகர். தற்போது இவர் இயக்கும் 'மஹான்' திரைப்படத்தில், பிரபல நடிகர் மித்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து, மித்ரா கூறுகையில், “விஜய ராகவேந்திரா நாயகனாக நடிக்கும் இப்படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கதையை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. நடிக்க சம்மதித்தேன். நல்ல கதைக்கரு கொண்டது. விஜய் ராகவேந்திரா அற்புதமான நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் காம்பினேஷன், ரசிகர்களுக்கு பிடிக்கும் என, நம்புகிறேன்,” என்றார்.
* கிராமத்து குயில்
கிரிஷ் காசரவல்லி இயக்கிய, 'இல்லிரலாரே அல்லி ஹோகலாரே' திரைப்படத்தில், நடிகை அயானா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். தற்போது திரைக்கு வர தயாராகும், 'எக்ஸ் அண்ட் ஒய்' படத்தில், மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார். இதுகுறித்து, அவர் கூறுகையில், “நடிகையாக வேண்டும் என, நான் கனவு கண்டது இல்லை. பரத நாட்டியம், நாடக உலகம் ஆகியவை எனக்கு, திரையுலகை அறிமுகம் செய்தது.
''எனக்கு திரையுலகம் புதிது. மக்களின் முன்பாக மேடைகளில் நடித்த எனக்கு, கேமரா முன்பாக நடிப்பது, சவாலாக இருந்தது. 'துார்தர்ஷன்' நான் நடித்த முதல் படம். இது வெற்றி அடைந்த பின்னரே, என் பயம் போனது. இப்போது நடிக்கும் படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்,” என்றார்.
* விசித்திரமான பாத்திரம்
ஷைன் ஷெட்டி மற்றும அங்கிதா அமர் இணைந்து நடித்துள்ள, 'ஜஸ்ட் மேரிட்' திரைப்படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. இதில் மூத்த நடிகர் தேவராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'ஓய்வு பெற்ற நீதிபதி பூர்ண சந்திரா கதாபாத்திரத்தில், தேவராஜ் நடித்துள்ளார். நீதிமன்றத்திலும், வீட்டிலும் சட்டத்தை பின்பற்றும் கதாபாத்திரமாகும். கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்த கூடியது. சமீபத்தில் அவரது போஸ்டர் வெளியிட்டு, கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது' என்றனர்.
***