
* நாயகிக்கு முக்கியத்துவம்!
நடிகர் யோகி முதன் முறையாக ஹீரோவாக நடித்திருந்த, 'நந்தா நந்திதா' என்ற படத்தில், நாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. படம் நன்றாக ஓடியது. குறிப்பாக பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. அதன்பின் தமிழ், கன்னடத்தில் பிசியானார். கன்னடத்துக்கு வரவில்லை. 14 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பின், கன்னடத்துக்கு வந்துள்ளார். 'பென்னி' என்ற படத்தில், நாயகியாக நடிக்கிறார். இது குறித்து நந்திதா ஸ்வேதா கூறுகையில், ''இயக்குனர் ராமேனஹள்ளி தயாரிக்கும், ஸ்ரீலேஷ் நாயக் இயக்கும் 'பென்னி' யில் நடிக்கிறேன். படத்தின் டீசரை வெளியிட்டு, படக்குழுவினரை நடிகர் சுதீப் வாழ்த்தினார். இது நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாகும். இது போன்ற கதாபாத்திரங்களை, நான் தேர்வு செய்து கொள்கிறேன், என்றார்.
--------
* 40 ஆண்டுகள் நிறைவு!
நடிகர் சிவராஜ் குமார் திரையுலகுக்கு வந்து, 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1986ல், 'ஆனந்த்' மூலம் சினி பயணத்தை துவக்கிய அவர், இதுவரை திரும்பி பார்க்கவே நேரம் இன்றி ஓடுகிறார். தற்போது, '45' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ளது. கிராபிக்ஸ் பணி நடக்கிறது.
இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'இந்த படத்தில் சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர். சிவராஜ் குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். விரைவிரல் திரைக்கு வரவுள்ளது. இதை தவிர தமிழில் ரஜினிகாந்துடன், 'ஜெயிலர் -2' , தெலுங்கில் ராம் சரணுடன், 'பெத்தி' திரைப்படத்திலும் சிவராஜ் குமார் நடிக்கிறார்.
--------
* கிராமத்து பெண் வேடம்!
'நடிகை ராதிகா நாராயணை திரையில் பார்த்து நீண்ட நாட்களாகின்றன' என, புலம்பும் ரசிகர்களுக்கு நற்செய்தி வந்துள்ளது. சேகர் இயக்கும், 'மஹான்' திரைப்படத்தில் ராதிகா நாராயண் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், ''இயக்குனர் சேகரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது அது நிறைவேறியுள்ளது. இது சமூக அக்கறை கொண்ட படமாகும். இத்தகைய கதையுள்ள படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் நான் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்,'' என்றார்.
-------
* நாயகனான உதவி இயக்குநர்!
கன்னடத்தில் பிசியான இயக்குனர்களில் சிம்பிள் சுனியும் ஒருவர். தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர். தற்போது 'மோட கவித வாதாவரனா' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இது குறித்து, அவரிடம் கேட்ட போது, ''இத்திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. திரைக்கு வர தயாராக உள்ளது. என் சினி பயணத்தில், 'ஒந்து சரள பிரேம கதே' படம் திருப்பு முனையாக அமைந்தது. இப்போது திரைக்கு வரும் படத்திலும் அழகான காதல் கதையுடன், ஆக்ஷன், திரில்லரும் இருக்கும். என்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷீலம், நாயகனாக அறிமுகமாகிறார்,'' என்றார்.
------
* தெலுங்கு, ஹிந்தியில் 'பிசி!'
பொதுவாக, 'பிக்பாஸ்' ஷோவில் பங்கேற்க, செலிபிரிட்டிகள் நான், நீ என போட்டி போடுவர். ஆனால் கன்னட நடிகை அனிதா ஹசனநந்தானிவுக்கு, ஹிந்தி பிக்பாஸ் ஷோவில் அழைப்பு வந்தும் நிராகரித்துள்ளார். இது குறித்து, அவர் கூறுகையில், ''பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ எனக்கு சரிப்படாது. வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கிறேன்,'' என்றார். அனிதா 2010ல் திரைக்கு வந்த 'ஹுடுகா ஹுடுகி' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின். அவர் கன்னடத்தில் நடிக்கவில்லை. தெலுங்கு, ஹிந்தி தொடர்களில் பிசியாக இருக்கிறார்.
--------
* தாலி அணியாதது ஏன்?
சின்னத்திரை மூலம், திரையுலகில் நுழைந்த நடிகை வைஷ்ணவி கவுடா, சில படங்களில் நடித்தார். வாய்ப்புகள் அதிகரித்த நிலையில், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர் தாலி அணியவில்லை. இது குறித்து கேட்ட போது, ''என் கணவர் வீட்டில் தாலி அணியும் நடைமுறை இல்லை. என் மாமியாரும் அணியவில்லை. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. அவர்களின் சம்பிரதாயப்படி திருமணமான பெண்கள் மூக்குத்தி, மெட்டி அணிந்திருக்க வேண்டும். கைகளில் ஒரு கண்ணாடி வளையலாவது இருக்க வேண்டும். அதை நான் பின்பற்றுகிறேன்,'' என்றார்.
***