
கிண்டல் பெயர்
ஒரு காலத்தில், நடிகர் கோமலை, சக மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் கூட 'எருமை', 'எருமை' என, அழைத்து கிண்டல் செய்தனர். இது அவரை கோபப்படுத்தியது. இப்போது அவர் அதே பெயர் கொண்ட படத்தில் கோமல் நாயகனாக நடிக்கிறார். படத்துக்கு கோணா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. (கன்னடத்தில் கோணா என்றால் எருமை என்றே அர்த்தம்). இது இம்மாதம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இவரது மனைவி லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை தனிஷா நடித்துள்ளார். மனித உணர்வுகளை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.
மூன்று அம்சங்கள்
கன்னடத்தில் தயாரான, தைர்யம் தர்மம் தேசம் திரைப்பட டீசர், பாடல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இரண்டு குறும்படங்களை இயக்கிய மஞ்சுநாத், இந்த படத்துக்கு கதை எழுதி இயக்கியுள்ளார். குடிமக்கள் தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும். அதிகாரிகள் தர்மத்தை காப்பாற்ற வேண்டும். ராணுவத்தினர் தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அம்சங்கள் கொண்டது. மனித நேயம், அன்பு, உறவுகளின் மகத்துவத்தை படத்தில் காட்டுகின்றனர். இதில் அருண் வெங்கடராஜு நாயகனாக, அவருக்கு ஜோடியாக ககனா மல்னாட் நடத்துள்ளனர். பெங்களூரு, மங்களுரு, கொள்ளேகால் உட்பட, பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
எழுதப்படாத விதி
கன்னடத்தில், கிஸ் திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்த நடிகை ஸ்ரீலீலா, தற்போது தமிழ், தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார். தொழிலில் ஏற்றம், இறக்கம் சகஜம். அதே போன்று இவர் நடித்த சில படங்களை தோற்றாலும், சில படங்கள் சூப்பர் ஹிட்டாகின. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. கன்னட நடிகையர், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து, பாலிவுட்டுக்கு செல்வது என்பது எழுதப்படாத விதி. இப்போது ஸ்ரீலீலாவும் பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அது திரைப்படம் அல்ல. விளம்பர படம். இதில் அவர் லேடி ஜேம்ஸ்பாண்ட் போன்று தென்படுகிறார். விரைவில் பாலிவுட் படத்தில் நடித்தாலும், ஆச்சர்யப்பட முடியாது.
ஜாதி படம்
புதிய விஷயங்களை படமாக்குவதில், இயக்குநர்களுக்கு ஆர்வம் அதிகம். தற்போது மகேஷ் இயக்கும், பிளி சுக்கி ஹள்ளி ஹக்கி திரைப்படம், வெள்ளை படலம் நோயை மையமாக கொண்ட கதையாகும். இந்த நோய்க்கு ஆளான மகேஷ், படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். வெள்ளை படலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சமுதாயம் எப்படி பார்க்கிறது, அவர்கள் சந்திக்கும் அவமதிப்புகளை படத்தில் காட்டியுள்ளார். இவருக்கு ஜோடியாக காஜல் குந்தர் நடித்துள்ளார். நகைச்சுவை கலந்து, சுவாரஸ்யமாக கதையை கொண்டு சென்றுள்ளார். இந்த படத்தில் ஜாதியும் முக்கிய பங்கு வகிக்கிறதாம்.
இரண்டாவது பாடல்
இயக்குனர் குமார் இயக்கத்தில் தயாரான, லவ் யு முத்து நவம்பர் 7ம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் மற்றொரு பாடல் வெளியாகியுள்ளது. தன் காதலியை பிரிந்த காதலனின் மன நிலை, தவிப்பு எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் பாடலாகும். பாடலை இயக்குநர் குமார் எழுதியுள்ளார். சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள நடிகர் சித்து நாயகனாக, ரேஷ்மா நாயகியாக நடித்துள்ளனர். இது அழகான காதல் கதை கொண்டதாகும். மஹாராஷ்டிராவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது.
டைட்டில் வெளியீடு
புதுமுக நடிகர் அஞ்சன் நாகேந்திரா நாயகனாக நடித்துள்ள, பார்டர் டைரீஸ் திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இவருக்கு ஜோடியாக நாயகியாக அஷ்விதா ஹெக்டே நடித்துள்ளார்.
நாயகன், நாயகி உட்பட, சிலர் புதுமுகங்கள். சில நாட்களுக்கு முன்பு, டைட்டில் வெளியிட்டனர். பெங்களூரு, மாகடி சுற்றுப்பகுதி, தமிழக எல்லையில் உள்ள தொழிற்பகுதி, சென்னப்பட்டணாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

