/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.1.33 லட்சம் கோடியை கோட்டை விட்ட காங்., அரசு ம.ஜ.த., பாய்ச்சல்
/
ரூ.1.33 லட்சம் கோடியை கோட்டை விட்ட காங்., அரசு ம.ஜ.த., பாய்ச்சல்
ரூ.1.33 லட்சம் கோடியை கோட்டை விட்ட காங்., அரசு ம.ஜ.த., பாய்ச்சல்
ரூ.1.33 லட்சம் கோடியை கோட்டை விட்ட காங்., அரசு ம.ஜ.த., பாய்ச்சல்
ADDED : அக் 16, 2025 05:40 AM

பெங்களூரு: கூகுள் நிறுவனத்தின் 1.33 லட்சம் கோடி ரூபாயை ஆந்திர மாநிலத்துக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தாரை வார்த்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நகரம் என்று பெயர் பெற்ற பெங்களூருக்கு, சமீப ஆண்டுகளாக பல பிரச்னைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, சாலைப் பள்ளம், குப்பை குறித்து கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல், குப்பை, சாலைப் பள்ளங்கள் குறித்து பெங்களூரில் உள்ள தொழிலதிபர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு, 'ஆந்திராவில் உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட பல சலுகைகள் அளிக்கப்படும்' என கூறி, அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் அழைப்பு விடுத்து வருகிறார். இதற்கு கர்நாடக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னரும் கூட, பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா, 'சாலைப் பள்ளங்கள், குப்பை பற்றி சீன தொழிலதிபர் கூறியது குறித்தாக தன் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதற்கு துணை முதல்வர், அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 1.33 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏ.ஐ., மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில், நேற்று முன்தினம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கூகுள் நிறுவனம் கையெழுத்திட்டது.
வெளிநாட்டு முதலீடுகளை இழுக்க, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், சில நாடுகளுக்கு சென்று, தொழிலதிபர்களை சந்தித்து கர்நாடகாவில் உள்ள வசதிகள் குறித்து விளக்குவார். அதன் பின், நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒன்று முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் ஈர்க்கப்படும்.
ஆனால் ஒரே கையெழுத்து மூலம், 1.33 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற்றதன் மூலம், மிகப்பெரிய வாய்ப்பை கர்நாடக காங்கிரஸ் அரசு கோட்டை விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து 'எக்ஸ்' பக்கத்தில் மாநில ம.ஜ.த., வெளியிட்ட பதிவு:
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், சிலிகான் சிட்டி என்று பெயர் பெற்ற பெங்களூரு மறைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கேயின் அலட்சியத்தால், மாநிலத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 'ஏஐ மையம்' அமைக்க, கூகுள் நிறுவனத்துடன் அம்மாநில அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம், கர்நாடகாவின் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், ஆண்டுதோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வேண்டிய வாய்ப்பு, ஆந்திராவுக்கு சென்றுள்ளது.
பள்ளங்கள், குப்பை, உள்கட்டமைப்பு சிக்கல்களால், பன்னாட்டு நிறுவனங்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ள இந்நேரத்தில், உலகளாவிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றுள்ளது.
தொழில் துறைக்கு உகந்த சூழலை வளர்ப்பதற்கு பதிலாக, முதலீட்டாளர்களை பெங்களூரு அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். துணை முதல்வர் சிவகுமாரின் ஆணவமும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கேயின் செயலற்ற தன்மையும் மாநிலத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளன.
இவ்வளவு பெரிய திட்டம், கர்நாடகாவின் கையில் இருந்து கைநழுவியதற்கான காரணத்தை, வெள்ளை அறிக்கை மூலம் காங்கிரஸ் அரசு வெளியிட வேண்டும். பெங்களூரின் தொழில்நுட்ப நகருக்கு ஒரு வரலாற்று இழப்பாகும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.