பா.ஜ., முனிரத்னா கூட்டாளிகள் ‘தட்டி துாக்கியது’ காங்கிரஸ்
பா.ஜ., முனிரத்னா கூட்டாளிகள் ‘தட்டி துாக்கியது’ காங்கிரஸ்
UPDATED : நவ 24, 2026 12:00 AM
ADDED : நவ 23, 2026 10:00 PM

பெங்களூரு: ஆர்.ஆர்.நகர் பா.ஜ., – எம்.எல்.ஏ., முனிரத்னாவின் மிக நெருங்கிய கூட்டாளிகள் இருவர், காங்கிரசில் இணைந்துள்ளனர்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., முனிரத்னா. இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். 2019ல் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.,வில் சேர்ந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிட்ட சிவகுமார் தம்பி சுரேஷ் தோற்றார்.
இதற்கு, முனிரத்னா தான் முக்கிய காரணம். அவர் தொகுதியில் மட்டும் காங்கிரசை விட பா.ஜ.,வுக்கு 99,000 ஓட்டுகள் கூடுதலாக கிடைத்தன. இதனால் சிவகுமார், சுரேஷின் அரசியல் எதிரியாக முனிரத்னா மாறியுள்ளார்.
இந்நிலையில், 2028 சட்டசபை தேர்தலில் முனிரத்னாவை தோற்கடித்தே ஆக வேண்டும் என்பதில், சுரேஷ் மும்முரமாக உள்ளார். தனது ஆதரவாளர் குஸ்மாவை வெற்றி பெற வைப்பதிலும் முனைப்பு காட்டுகிறார். இதனால் முனிரத்னாவின் நெருங்கிய கூட்டாளிகள், ஆதரவாளர்களுக்கு வலை விரித்தார்.
இந்த வலையில் முனிரத்னாவின் நெருங்கிய கூட்டாளிகளான முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ், கொலகேரி கணேஷ் ஆகியோர் விழுந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்று தங்கள் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோருடன் காங்கிரசில் இணைந்தனர்.
அவர்களுக்கு கட்சி கொடியை கொடுத்து, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத், சுரேஷ், குஸ்மா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வெங்கடேஷ், முன்பு காங்கிரசில் இருந்தவர். முனிரத்னா, காங்கிரசில் இருந்து விலகிய போது அவருடன் வெங்கடேஷும் சென்று விட்டார். முனிரத்னா தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால், சில மாதங்களாக முனிரத்னாவுக்கும், வெங்கடேஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கொண்ட காங்கிரஸ் அவரை தட்டி துாக்கியுள்ளது.
இது போல, குடிசை பகுதி மக்கள் ஓட்டுகள் முனிரத்னாவுக்கு கிடைப்பதில், கொலகேரி கணேஷ் முக்கிய பங்கு வகித்தவர்.
இவர்கள் இருவரும் காங்கிரசில் இணைந்திருப்பது, முனிரத்னாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
