UPDATED : நவ 25, 2026 12:00 AM
ADDED : நவ 24, 2026 11:30 PM

பெங்களூரு: ஹாசனிலிருந்து சிக்கமகளூருக்கு யானைகளை விரட்டும் விவகாரத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் ஹரிபிரசாத் சமாதானம் செய்ததை அடுத்து, காங்., – எம்.எல்.ஏ., நயனா நேற்று தன் ராஜினாமா முடிவை கைவிட்டார்.
ஹாசனிலிருந்து, 56 யானைகளை, சிக்கமகளூரு பத்ரா வன விலங்கு சரணாலயத்திற்கு விரட்டும் நடவடிக்கைக்கு, மூடிகெரே காங்கிரஸ் எம்.எல்.ஏ., நயனா எதிர்ப்பு தெரிவித்தார். தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக, கடந்த 22ம் தேதி அறிவித்தார்.
ராஜினாமா கடிதத்துடன் பெங்களூரு விதான் சவுதாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். சபாநாயகர் ஜி.எஸ்.பாட்டீல் இல்லாததால், அவரால் கடிதத்தை சமர்ப்பிக்க முடியவில்லை. இதனால், நேற்று ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க இருந்தார்.
இதற்கிடையில், காங்கிரஸ் மாநில தலைவர் ஹரிபிரசாத், நயனாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். ‘அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். முதல்வர் சிவகுமார் இந்தியா வந்ததும் பிரச்னையை பேசி சரிசெய்து கொள்ளலாம்’ என்று ஹரிபிரசாத் உறுதியளித்தார். இதனால், நயனா தனது ராஜினாமா செய்யும் முடிவை மாற்றிக்கொண்டார்.
இதுகுறித்து, ஹரிபிரசாத் கூறியதாவது:
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு இது பெரிய பிரச்னை கிடையாது. அவசரத்தில் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. சிக்கமகளூரில் ஏற்கனவே யானைகளால் அதிக இழப்புகள் ஏற்படுகின்றன.
இப்பிரச்னை குறித்து முதல்வர் சிவகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.
இதில், சிக்கமகளூரு எம்.எல்.ஏ.,க்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். அதுவரை, ராஜினாமா முடிவை கைவிடுமாறு நயனாவிடம் அறிவுறுத்தப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
