பா.ஜ., தலைவர் கொலை வழக்கில் காங்., - எம்.எல்.ஏ., வினய் குற்றவாளி
பா.ஜ., தலைவர் கொலை வழக்கில் காங்., - எம்.எல்.ஏ., வினய் குற்றவாளி
ADDED : ஏப் 16, 2026 04:03 AM

பெங்களூரு: பா.ஜ.,வின் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய்குல்கர்னி குற்றவாளி என, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது.
தார்வாட் மாவட்டத்தின், ஹெப்பள்ளி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் பா.ஜ., கவுன்சிலராக இருந்தவர் யோகேஷ்கவுடா. வளர்ந்து வந்த இளம் தலைவர். இப்பகுதியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி போன்ற செல்வாக்கு மிக்க தலைவருக்கு, அரசியல் ரீதியில் சவாலாக இருந்தார்.
பெரும் பரபரப்பு கடந்த 2016 ஜூன் 15ம் தேதியன்று, தார்வாடின் சப்தாபுராவில் உள்ள ஜிம்மில் இருந்த போது, திடீரென அங்கு நுழைந்த மர்மகும்பல், அவரது முகத்தில் மிளகாய் பொடியை வீசி, அரிவாள், இரும்புத்தடி போன்ற ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். இது மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் இந்த வழக்கை, தார்வாட் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது குடும்பத்தினரின் வலியுறுத்தலுக்கு பணிந்து, அன்றைய பா.ஜ., அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது. விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், கொலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு தொடர்பிருப்பதை கண்டுபிடித்தனர். அவரை 2020ல் கைது செய்தனர்.
ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு, உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்தது என்றாலும், தார்வாடில் நுழைய கூடாது என, நிபந்தனை விதித்தது, இவர் சாட்சிகளை கலைக்க, விலைக்கு வாங்க முயற்சித்ததால், அவரது ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்பின் அவர் மீண்டும் கைதானார்.
குற்றப்பத்திரிகை விசாரணையை முடித்த சி.பி.ஐ., மக்கள் பிரதிநிகள் சிறப்பு நீதிமன்றத்தில், 21 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
யோகேஷ் கவுடாவின் அரசியல் முன்னேற்றத்தை சகிக்க முடியாமல் அவரை கொலை செய்தனர். ரியல் எஸ் டேட் விஷயத்திலும், இவர் மீது வினய் குல்கர்னிக்கு கோபம் இருந்ததும், கொலைக்கு காரணமானது என்பதை, சி.பி.ஐ., விவரித்தது.
நீ திமன்றம் வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்தது. கடந்த வாரம் தீர்ப்பு வெளியிட இருந்தது. நேற்று தள்ளி வைத்திருந்தது. 21 பேரில் இருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர், வினய் குல்கர்னி உட்பட 19 பேர் குற்றவாளிகள் என, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது, தண்டனையை இன்று வெளியிடுவதாக அறிவித்தது.
தீ ர்ப்பு வெளியாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வினய் குல் கர்னியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவருக்கு தண்டனை கிடைத்தால், காங்கிரஸ் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும். இவரது எம்.எல்.ஏ., பதவியும் பறிபோகலாம்.
