எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் எம்.எல்.ஏ., முடிவு?
எதிர்க்கட்சி வரிசையில் அமர காங்கிரஸ் எம்.எல்.ஏ., முடிவு?
ADDED : ஆக 05, 2026 11:12 PM

பெங்களூரு: அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியால், சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர, காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., ஜெயசந்திரா முடிவு செய்துள்ளார்.
துமகூரின் சிரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜெயசந்திரா, 78. கர்நாடக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாகவும் உள்ளார். சீனியர் அடிப்படையில் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளார்.
தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனையின் போது ஜெயசந்திரா பேசுகையில், ''கட்சிக்காக உழைத்த என்னை அவமதித்து உள்ளனர். என் சீனியாரிட்டியை அவமதித்து உள்ளனர். இதனால் சட்டசபையில் ஆளுங்கட்சி வரிசையில் அமர மாட்டேன். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பேன். தேவைப்படும் நேரத்தில் அரசுக்கு ஆலோசனை வழங்குவேன்,'' என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, சட்டசபை செயலருக்கு கடிதம் எழுதவும் முடிவு செய்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.
அமைச்சர் பதவி கிடைக்காததால், அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் தினேஷ் குண்டுராவ், பேலுார் கோபாலகிருஷ்ணா, எச்.கே.பாட்டீல் உள்ளிட்டோரை, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் நேற்று நேரில் சந்தித்து சமாதானப்படுத்தினார். தினேஷ் குண்டுராவ், தேஷ்பாண்டேவுக்கு அமைச்சர் பதவி வழங்காததை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில் பிராமணர் சமூகத்தினர் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களுக்கு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதால், இரண்டு மாவட்ட எம்.எல்.ஏ.,க்களும், டில்லி சென்று புகார் அளிக்க தயாராகி வருகின்றனர். சிக்கபல்லாபூரின் பாகேபள்ளி, குடிபந்தே, சேலுார் தாலுகாக்களில் நேற்று முழு அடைப்பு நடந்தது.
வியாபாரிகள் தாங்களாக முன்வந்து கடைகளை அடைத்தனர். அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. போராட்டம் நடத்தியவர்கள் சாலையில் உருண்டும், டயர்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
