காங்., அலுவலகத்தில் தொண்டர்கள் அடிதடி தீபிகா ரெட்டி பதவி பறிப்பால் ஆவேசம்
காங்., அலுவலகத்தில் தொண்டர்கள் அடிதடி தீபிகா ரெட்டி பதவி பறிப்பால் ஆவேசம்
ADDED : மே 18, 2026 11:18 PM

பெங்களூரு: கர்நாடக இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் தீபிகா ரெட்டி உட்பட 15 பேரை, பொறுப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து, காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத் கவுடா தொந்தரவு கொடுப்பதாக, தீபிகா ரெட்டி பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளில் பங்கேற்கவில்லை என்று கூறி, கர்நாடக இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் தீபிகா ரெட்டி, மாநில பொது செயலர்கள் பிரான்சிஸ் பெனிட்டோ, பிந்து கவுடா, சுமன் சோமசேகர், அப்னன்கானம், லட்சுமி, வாணி காம்ப்ளே, தட்சிணா மூர்த்தி, கட்சியின் மாநில செயலர்கள் சையது உசேன் காத்ரி, சந்த் பாஷா, கோவர்த்தன் உட்பட 15 பேரை, அவர்கள் வகித்த பொறுப்பில் இருந்து நீக்கி, காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்தில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத் கவுடா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நீட் வினாத்தாள் கசிவானது தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
பிரச்னைக்கு முடிவு இந்த நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்ற தீபிகா ரெட்டியின் ஆதரவாளர்கள் சிலர், தீபிகா ரெட்டியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய மஞ்சுநாத் கவுடாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பதிலுக்கு மஞ்சுநாத் கவுடாவின் ஆதரவாளர்களும் பேசியதால், இருவரின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். கட்சியின் மூத்த தலைவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
மஞ்சுநாத் கவுடா கூறுகையில், ''கட்சி அலுவலகத்தில் எந்த பிரச்னையும் நடக்கவில்லை. கட்சிக்காக சரியாக பணியாற்றாதவர்களை, பொறுப்பில் இருந்து நீக்கவோ, சஸ்பெண்ட் செய்யவோ இல்லை. அவர்களை ஒதுக்கி வைத்து உள்ளோம். அவர்களிடம் பேசி பிரச்னைக்கு முடிவு கட்டுவோம்,'' என்றார்.
சிவகுமாரிடம் புகார் தீபிகா ரெட்டி கூறியதாவது:
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு தேர்தல் நடந்த போது, எனக்கும், மஞ்சுநாத் கவுடாவுக்கும் இடையில் கடும் போட்டி ஏற்பட்டது. நான் 12 லட்சம் ஓட்டுகள் வாங்கினேன்.
ஆனால், 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் செல்லாது என்று கூறினர். இதனால் எனக்கு கிடைக்க வேண்டிய தலைவர் பதவி பறிபோனது. ஆனாலும் துணை முதல்வர் சிவகுமார் கூறியதால், கட்சிக்காக தீவிரமாக உழைத்து வருகிறேன்.
எனக்கு 8 மாவட்டங்களின் பொறுப்பு கொடுத்து உள்ளனர். வடமாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அடிமட்டத்தில் இருந்து கட்சியை வளர்க்கிறேன். எனது வளர்ச்சி பிடிக்காமல், மஞ்சுநாத் கவுடா பழிவாங்கும் அரசியல் செய்கிறார்.
அலுவலகத்தில் இருந்து வெளியே செல் என்று ஒருமையில் பேசுகிறார். பல மாவட்ட தலைவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார். இதுபற்றி துணை முதல்வர் சிவகுமாரிடம் கண்டிப்பாக புகார் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
