இளைஞர் காங்., பொதுச்செயலரை கொல்ல சதித்திட்டம்: 7 பேர் கைது
இளைஞர் காங்., பொதுச்செயலரை கொல்ல சதித்திட்டம்: 7 பேர் கைது
ADDED : ஜூன் 28, 2026 10:51 PM

பெங்களூரு: கர்நாடக இளைஞர் காங்கிரஸ் பொது செயலர் அப்பாஸ் ஹுசைனை கொலை செய்ய, சதித்திட்டம் தீட்டிய கூலிப்படையினர் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் அப்பாஸ் ஹுசைன், 35. இவரை கொலை செய்ய ஒரு கும்பல் சதி திட்டம் தீட்டுவதாக பெங்களூரு சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, கூலிப்படையை சேர்ந்த ஷகீல், சுமந்த், சிவபிரசாத், சரவணா, வினோத், நிஷாந்த், பிரேம் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள், வாள் உட்பட, 30க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிசின் ஆதரவாளர் ஹைதர் அலி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அசோக்நகர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் அப்பாஸ் ஹுசைன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனால் அப்பாஸை தீர்த்துக்கட்ட ஹைதர் அலியின் சகோதரர் ஷபீர் அலி, கூலிப்படைக்கு பணம் கொடுத்தது தெரிந்தது. கூலிப்படையினர், அப்பாஸின் நடமாட்டத்தை கண்காணித்ததும் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள ஷபீர் அலி உட்பட சிலரை போலீஸ் தேடுகிறது.
