அரசு, தனியார் பள்ளி புத்தகங்களில் அரசியலமைப்பு பாடங்கள்: முதல்வர்
அரசு, தனியார் பள்ளி புத்தகங்களில் அரசியலமைப்பு பாடங்கள்: முதல்வர்
UPDATED : நவ 27, 2026 12:00 AM
ADDED : நவ 26, 2026 11:16 PM

மைசூரு: ‘‘அடுத்த கல்வியாண்டு முதல், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்திலும் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பாடம் சேர்க்க, தனிக்குழு அமைக்கப்படும்,’’ என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
மைசூரு மாவட்ட நிர்வாகம், சமூக நலத்துறை, மாவட்ட பஞ்சாயத்து இணைந்து ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்பு தின விழா, மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
அரசியலமைப்பு சட்டம் என்பது வெறும் புத்தகம் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியரின் உரிமை, கண்ணியம், சுதந்திரம், சமத்துவத்திற்கான கேடயம். அதன் லட்சியங்களையும், மதிப்புகளையும் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும்.
நாட்டின், 140 கோடி மக்களின் கனவுகள், கவுரவம், உரிமைகளை பாதுகாக்கும் தேசிய சக்தி. ஒவ்வொரு மாணவரும் அரசியல் அமைப்பின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும்.
எனவே, அடுத்த கல்வியாண்டு முதல், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்திலும், அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பாடம் சேர்க்க, தனிக்குழு அமைக்கப்படும்.
பாட புத்தகங்களில் பொருத்தமான வாசகங்கள் சேர்க்கப்படும். மாணவர்கள், அரசியலமைப்பை வாசிப்பது மட்டுமல்லாமல், அதன் கொள்கைகளை வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.
இளைஞர்கள் இடையே ஜனநாயக விழிப்புணர்வையும், தலைமை பண்புகளையும் வளர்க்க, சட்ட சபை தொகுதிகளில் இளைஞர் நாடாளுமன்றங்கள் அமைத்து, இளம் தலைவர்களை அடையாளம் காண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளன. அடுத்த தலைமுறைக்கு அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த, இத்தகைய முயற்சிகள் அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
