/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாய் - சேய் மருத்துவமனை கட்டுமான பணி மும்முரம்
/
தாய் - சேய் மருத்துவமனை கட்டுமான பணி மும்முரம்
ADDED : ஜூலை 09, 2025 12:46 AM

பெங்களூரு : பெங்களூரின், கே.சி. ஜெனரல் மருத்துவமனை வளாகத்தில், புதிதாக கட்டப்படும் தாய் - சேய் மருத்துவமனை பணிகள், பல இடையூறுகளுக்கு இடையே துவங்கியுள்ளன.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் மல்லேஸ்வரத்தில், கே.சி.ஜெனரல் மருத்துவமனைக்கு, தினமும் 800க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். தற்போதுள்ள வசதிகளை வைத்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு அனுகூலமாகும் வகையில், இங்கு புதிதாக தாய் - சேய் மருத்துவமனை கட்டப்படுகிறது.
தாய் - சேய்களுக்கு சிகிச்சை அளிப்பதில், வாணி விலாஸ் மருத்துவமனை பெயர் பெற்றது. இங்கு நோயாளிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சிகிச்சையளிப்பது பெரும் சவாலாக உள்ளது.
தற்போது கே.சி.ஜெனரல் மருத்துவமனையில், பெண்கள் மற்றும் பிரசவ பிரிவில், 100 படுக்கைகள் உள்ளன. சிகிச்சைக்கு வரும் தாய் - சேய்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், சிகிச்சை அளிப்பது கஷ்டமாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, கே.சி.ஜெனரல் மருத்துவமனை வளாகத்தில், புதிதாக தாய் - சேய் மருத்துவமனை கட்டப்படுகிறது. 66.78 கோடி ரூபாய் செலவில், 200 படுக்கை வசதி கொண்ட தாய் - சேய் மருத்துவமனை கட்டப்படுகிறது. இந்நேரம் 50 சதவீதம் பணிகள் முடிந்திருக்க வேண்டும்.
ஆனால் கட்டுமான இடத்தில் இருந்த மரங்களை இடமாற்றுவது, கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகின. தற்போது கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்த ஜூலையில் பணிகள் முடிவடையும்.
அப்போது அதிநவீனமான மருத்துவமனை தயாராகும். இந்த மருத்துவனை செயல்பட துவங்கினால், வாணி விலாஸ் மருத்துவமனை மீதான அழுத்தம் குறையும். மல்லேஸ்வரத்தின் கே.சி.ஜெனரல் மருத்துவமனை 13.5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு தாய் - சேய் மருத்துவமனை உட்பட சில கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.