பயணிக்கு ரூ.13,000 நிவாரணம் கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
பயணிக்கு ரூ.13,000 நிவாரணம் கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 20, 2026 03:29 AM

குடகு: பஸ்சில் 'ஏசி' வசதி சரி இல்லாததால், பாதிப்படைந்த பயணிக்கு 13,000 ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு, குடகு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் பிளிகேரி கிராமத்தில் வசிப்பவர் சச்சித். இவர் கடந்த, 2025ம் ஆண்டு, நவம்பர் 6ம் தேதியன்று, மடிகேரியில் இருந்து பெங்களூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி.,யின், இ.வி., பவர் பிளஸ் பஸ்சில் பயணித்தார். இது குளிர்சாதன வசதி உள்ள பஸ்சாகும்.
பயணத்தின் போது, குளிர்சாதனம் செயல்படவில்லை. பயணியர் பாதிப்படைந்தனர். இது குறித்து ஓட்டுநர், நடத்துநரிடம் தெரிவித்தும் பயன் இல்லை.
குளிர்சாதன வசதி கொண்ட பஸ் என்பதால், ஜன்னல் வசதி இல்லாதால், காற்று இல்லாமல் அவதியுடன் பயணியர் பயணித்தனர்.
இது குறித்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்ட சச்சித், பயணியருக்கு சரியான போக்குவரத்து சேவை வழங்குவதில் குளறுபடி செய்த கே.எஸ்.ஆர்.டி.சி.,யிடம் நிவாரணம் பெற்று தர வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.
மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், 'குளிர் சாதன வசதி கொண்ட பஸ்களில், பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அதற்கு தகுந்தபடி வசதிகள் இருக்க வேண்டும்.
'மடிகேரியில் இருந்து புறப்பட்ட பஸ்சில், 'ஏசி' வசதி பழுதடைந்ததால், மைசூரு பஸ் நிலையத்தில் மாற்று பஸ் வசதி செய்திருக்க வேண்டும் அல்லது நிவாரணம் வழங்குவது போக்குவரத்து கழகத்தின் பொறுப்பு' என கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, மனுதாரர் சச்சித்துக்கு, 13,000 ரூபாயை ஆண்டுக்கு, 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என, கே.எஸ்.ஆர்.டி.சி.,க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
