சர்ச்சை! எல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவ கழிவுகளால்...
சர்ச்சை! எல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவ கழிவுகளால்...
UPDATED : அக் 12, 2026 12:00 AM
ADDED : அக் 11, 2026 10:46 PM
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலை – 766ன், சாலை ஓரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, எய்ச்சர் வாகன ஓட்டுநர், மருத்துவ கழிவுகளை கொட்டிவிட்டு தப்பியோடினார்.
‘செக்போஸ்ட்’
காலையில் இதை பார்த்த அப்பகுதியினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குண்டுலுபேட் போலீசார், அங்கு சென்று பார்வையிட்டனர்.
அபாயமான மருத்துவ கழிவுகளை கொட்டியிருப்பது தெரிந்தது. கேரளாவில் இருந்து, கர்நாடகாவுக்கு காலியாக வரும் சரக்கு லாரிகள், கேரளாவின் மருத்துவமனைகளில் இருந்து, அபாயமான மருத்துவ கழிவுகளை நிரப்பி வந்து, நள்ளிரவில் திருட்டுத்தனமாக கர்நாடக எல்லையில், சாலை ஓரங்களில் கொட்டுகின்றனர்.
கேரளா மற்றும் கர்நாடக எல்லை பகுதிகளில் வனத்துறையினரும், போலீசாரும் செக்போஸ்ட் அமைத்து, தீவிரமாக கண்காணிக்கின்றனர். அதையும் மீறி நேற்று முன்தினம் நள்ளிரவு, எய்ச்சர் வாகனத்தில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர்.
இதில் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச், குளுக்கோஸ் பாட்டில்கள், பஞ்சு, காயத்துக்கு போடப்பட்ட பேன்டேஜ் உட்பட அபாயமான ரசாயன கழிவுகள் இருந்தன.
இத்தகைய கழிவுகளால், சுற்றுப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், கன்னட அமைப்பினரும், பொது மக்களும் கோபம் அடைந்துள்ளனர். கர்நாடகாவை, ‘கேரளாவின் குப்பை தொட்டி’யாக்க விடமாட்டோம் என, எச்சரித்துள்ளனர்.
கிருமி நாசினி
‘கர்நாடக எல்லையில் உள்ள செக்போஸ்டுகளில், ஊழியர்கள் வாகனங்களை கண்காணித்து சோதனையிடுவது இல்லை. அவர்களின் அலட்சியத்தால், கேரளாவின் அபாயமான மருத்துவ கழிவுகள், கர்நாடகாவுக்கு வருகின்றன’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘நெடுஞ்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, எய்ச்சர் வாகன ஓட்டுநரை கண்டுபிடித்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மருத்துவ கழிவுகளை அகற்றி, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்’ எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
