/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்த தம்பதி
/
ரூ.3 லட்சத்துக்கு குழந்தையை விற்பனை செய்த தம்பதி
ADDED : ஜூலை 12, 2025 11:02 PM
கார்வார்: கடனை அடைக்க முடியாமல், தம்பதி தங்களின் பச்சிளம் ஆண் குழந்தையை 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது.
உத்தரகன்னடா மாவட்டம், தாண்டேலி தாலுகாவின் தேஷ்பாண்டே நகரில் வசிப்பவர் வசீம் சன்டு படேல், 30.
இவரது மனைவி மாஹீன், 26. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாஹீன், பிரசவத்துக்காக தாண்டேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஜூன் 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் தந்தை வசீம் சன்டு படேல், பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். இதை அடைக்க முடியாமல் அவதிப்பட்டார். கடன்காரர்கள் தினமும் வீட்டு முன் வந்து, பணம் கேட்டு நச்சரித்தனர்.
எனவே தங்களின் குழந்தையை விற்க, தம்பதி முடிவு செய்தனர்.
பெலகாவியின் ஆனகோளாவை சேர்ந்த நுார் அகமது அப்துல் மஜீத், 47, கிஷன் ஐரேகரா, 42, குழந்தையை வாங்க முன் வந்தனர். 3 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி முடித்தனர். ஜூலை 8ம் தேதி, வசீம் சன்டு படேல், பெலகாவிக்கு சென்று குழந்தையை விற்று விட்டு, பணத்துடன் வீடு திரும்பினார்.
மாஹீன் குழந்தை பெற்ற பின், அங்கன்வாடி ஊழியர் ரேஷ்மா, தினமும் வந்து தாய் - சேயின் உடல் ஆரோக்கியத்தை கவனித்து வந்தார். அதன்படி அவர்கள் வீட்டுக்கு வந்த போது, குழந்தை இல்லாததை கவனித்தார். சந்தேகம் அடைந்த அவர் தாண்டேலி போலீஸ் நிலையத்தில், புகார் செய்தார்.
போலீசார், வசீம் சன்டு படேலின் வீட்டுக்கு வந்து விசாரித்த போது கடனை அடைக்க குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டனர். அதன்பின் போலீசார், பெலகாவிக்கு சென்று நுார் அகமது அப்துல் மஜீத், கிஷன் ஐரேகராவை நேற்று கைது செய்தனர். குழந்தையை மீட்டனர்.
குழந்தையின் பெற்றோர், கைது பயத்தில் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடுகின்றனர். தற்போது குழந்தை, சிர்சியின் குழந்தைகள் நலன் கமிட்டி பராமரிப்பில் உள்ளது.

