ADDED : ஜூன் 14, 2026 11:35 PM
டூ - வீலர் மீட்பு
தங்கவயல் கேசம்பள்ளி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கசிரெட்டி காண்ட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவராமப்பா, 55, என்பவர், தனது இரு சக்கர வாகனத்தை, தன் செங்கல் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த முல்பாகலை சேர்ந்த ஷேக் பியாருசாப், 45, திருடிச் சென்றதாக புகார் செய்தார். விசாரித்த போலீசார், ஷேக் பியாருசாப், 45, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 70,000 ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தாலி செயின் பறிப்பு
கேசம்பள்ளி அருகே உள்ள மரவூர் கிராமத்தைச் சேர்ந்த ஹேமாவதி, தனது வீட்டில் இருந்தபோது, ஜோதி பிரசாத், 26. என்பவர், வீட்டிற்குள் நுழைந்து, தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று ேஹமாவதி கூறியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஹேமாவதி கழுத்தில் இருந்த தாலி செயினை, கேசம்பள்ளியைச் சேர்ந்த ஜோதிபிரசாத், 26, பறித்துக் கொண்டு வெளியேறினார். போலீசில் ஹேமாவதி புகார் செய்தார். போலீசார் விசாரித்து ஜோதி பிரசாத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 லட்சத்து 32,000 ரூபாய் மதிப்புள்ள 36 கிராம் தாலி செயினை மீட்டனர்.
மதுக்கடையில் மோதல்
முல்பாகலின் இ.மிட்டஹள்ளி கிராமத்தின் மதுக்கடையில் மது குடித்து கொண்டிருந்த கசிவனரெட்டிஹள்ளியை சேர்ந்த ஹேமந்த், 30 என்பவர் போதையில், ஒருவரை தாக்கினார். இதை தட்டி கேட்ட மதுக் கடை கேஷியர் தேவராஜையும் தாக்கினார். கடையில் ஐந்து மது பாட்டில்களை உடைத்தார். போலீசில் புகார் செய்யப்பட்டது. ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் இருவர் பலி
மைசூரின் டி.நரசிபூர் கெம்பயனஉண்டி கிராமத்தில் நேற்று காலையில் பைக், அரசு பஸ் மோதியதில், பைக்கில் சென்ற ராகவேந்திரா, 36 என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அதுபோல, மைசூரு - குண்டுலுபேட் தேசிய நெடுஞ்சாலையில் நஞ்சன்கூடு ரூரல் பகுதியில், வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியதில், பைக்கில் சென்ற நஞ்ச நாயக், 56, என்பவர் துாக்கி வீசப்பட்டார். தலையில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார்.
