ADDED : ஏப் 27, 2025 04:52 AM

சிக்கபல்லாபூர்: ஏரியில் தவறி விழுந்த மகளை காப்பாற்ற சென்று, தந்தையும் நீரில் மூழ்கி இருவரும் பலியாகினர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டாவின் ஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ், 45. இவரது மகள் தனுஸ்ரீ, 13. ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை தோட்ட பணிக்கு நாகேஷ் சென்றபோது, தனுஸ்ரீயும் சென்றார். அங்குள்ள ஏரியில் தனுஸ்ரீ, கை, கால்களை கழுவிக் கொண்டிருந்தார்.
அப்போது கால் வழுக்கி, ஏரிக்குள் விழுந்து தத்தளித்தார். இதை பார்த்த அவரது தந்தை நாகேஷ், மகளை காப்பாற்ற ஏரியில் குதித்தார். ஏரியில் சேரும், சகதியும் அதிகமாக இருந்ததால், இருவரின் கால்களும் அதில் சிக்கிக் கொண்டன.
இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அவ்வழியாக வந்த கிராமத்தினர், இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சித்லகட்டா போலீசார் விசாரிக்கின்றனர்.