/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வனப்பகுதியில் மீண்டும் சபாரிக்கு அனுமதி; தொழில்நுட்ப குழு கருத்தை கேட்டு முடிவு
/
வனப்பகுதியில் மீண்டும் சபாரிக்கு அனுமதி; தொழில்நுட்ப குழு கருத்தை கேட்டு முடிவு
வனப்பகுதியில் மீண்டும் சபாரிக்கு அனுமதி; தொழில்நுட்ப குழு கருத்தை கேட்டு முடிவு
வனப்பகுதியில் மீண்டும் சபாரிக்கு அனுமதி; தொழில்நுட்ப குழு கருத்தை கேட்டு முடிவு
UPDATED : ஜன 03, 2026 07:19 AM
ADDED : ஜன 03, 2026 05:58 AM

பெங்களூரு: வனப்பகுதியில் சபாரிக்கு அனுமதி வழங்குவது குறித்து, தொழில்நுட்ப குழுவை அமைத்து, அவர்களின் கருத்தை பெறுமாறு வன அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.
சாம்ராஜ்நகரின் பண்டிப்பூர், மைசூரின் நாகரஹொளே வன சரணாலயங்களில், விலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணியர், வனத்துறை வாகனங்களில் சபாரி அழைத்து செல்லப்பட்டனர்.
வாகனங்கள் மீது விலங்குகள் பாய்ந்து, சில சுற்றுலா பயணியருக்கு காயம் ஏற்பட்டதால், பண்டிப்பூர், நாகரஹொளேயில் சபாரி செல்வதற்கு தற்காலிக தடை விதித்து அரசு உத்தரவிட்டது. சபாரி நிறுத்தப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, சொகுசு விடுதி உரிமையாளர்கள், அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.
இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், மாநில வனவிலங்கு வாரியத்தின் 20வது கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் வனப்பகுதியில் சபாரிக்கு மீண்டும் அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ''பண்டிப்பூர், நாகரஹொளேயில் மீண்டும் சபாரி துவங்குவது குறித்து, தொழில்நுட்ப குழுவை அமையுங்கள். அவர்களின் கருத்தை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுங்கள். சபாரி வாகனங்களால் ஏற்படும் தொந்தரவுகளால், வன விலங்குகள் ஊருக்குள் வருகிறதா, சபாரி வாகனங்களின் திறன் என்ன என்பது பற்றியும் கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பேசுகையில், ''சபாரி வாகனங்களால் ஏற்படும் தொந்தரவுகளால், வனவிலங்குகள் ஊருக்குள் வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு கூறுகின்றனர். 1972ல் பண்டிப்பூரில் 12 புலிகள் மட்டுமே இருந்தன.
இப்போது 200 புலிகள் உள்ளன. புலிகள் சுதந்திரமாக வாழ 10 சதுர கி.மீ., பரப்பளவு தேவை என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் நம்மிடம் பரப்பளவு குறைவாக இருப்பதாக, வனப்பகுதியில் இருந்து புலிகள், ஊருக்குள் வருகின்றன,'' என்றார்.
வன விலங்கு துாதர் அனில் கும்ப்ளே கூறுகையில், ''வனப்பகுதியில் சபாரி நடத்துவதற்கும், வனவிலங்குகள் வெளியேறுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளூர்வாசிகள் வாழ்வாதாரமும் உள்ளது. சபாரியை துவங்குவது குறித்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.

